ராமர் கோவில் கும்பாபிஷேகம்: நேரலையை எப்படி, எப்போது பார்ப்பது?

Ayodhya Ramar Temple Pran Pratishtha Live Telecast: உத்தர பிரதேச மாநிலத்தின் ராம ஜென்மபூமி என்றழைக்கப்படும் அயோத்தி நகரில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த அயோத்தி ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா (Ramar Temple Pran Pratishtha) வரும் திங்கட்கிழமை அதாவது ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 

ராமர் கோவில் அறக்கட்டளையானது பக்தர்கள் ஆன்லைன் மூலம் விழாவில் பங்குபெற வழிவகை செய்துள்ளது. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோயில்கள், அதுமட்டுமின்றி பிற பொது இடங்களிலும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் காண்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேரலையில் எப்படி, எப்போது பார்ப்பது?

ராமர் கோவில் கும்பாபிஷேக முக்கிய சடங்குகளை வாரணாசி பூசாரி லக்ஷ்மி காந்த் தீட்சித் செய்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .கும்பாபிஷேக விழாவின் நேரடி ஒளிபரப்பு ஜன. 22ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். 

இந்த நேரலையை தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் தூர்தர்ஷனின் டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷனல் சேனல்களில் பார்க்கலாம். மேலும், தூர்தர்ஷன் டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷ்னல் யூடியூப் சேனல்களில் நேரடி ஒளிபரப்பை பார்க்கலாம். தூர்தர்ஷன் மற்ற செய்தி நிறுவனங்களுக்கு நேரலை ஊட்டத்தையும், மற்ற ஒளிபரப்பாளர்களுக்கான யூ-ட்யூப் இணைப்பையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோவில் வளாகம், ராம் கி பைடி, ஜடாயு சிலை மற்றும் குபேர் திலா போன்ற பல்வேறு இடங்களில் தூர்தர்ஷன் கிட்டத்தட்ட 40 கேமராக்களைப் பயன்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டிற்கு தூர்தர்ஷன் பயன்படுத்திய 4K தொழில்நுட்பத்தில் நேரடி ஒளிபரப்பு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

பாஜக தரப்பில் ஏற்பாடு

இந்த நிகழ்வு பல மொழிகளிலும் சேனல்களிலும் ஒளிபரப்பப்படும். எனவே, தற்போது பெயர் மாற்றம் பெற்றுள்ள டிடி தமிழ் சேனலிலும் நீங்கள் இந்த ஒளிப்பரப்பை தமிழிலேயே காணலாம். தனியார் சேனல்களும் தூர்தர்ஷன் மூலம் ஊட்டத்தை அணுகலாம் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்திருந்தார்.

உலகெங்கிலும் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களிலும் விழா ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விழாவை ஒளிபரப்ப ஆயிரக்கணக்கான கோவில்கள் மற்றும் சாவடிகள் பாஜக தரப்பில் தயாராகி வருகின்றன.

அரை நாள் விடுமுறை 

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில் ந
நடைபெறும். கோயில் அறக்கட்டளை அளித்த தகவலின்படி, இந்த நிகழ்ச்சிக்கு சுமார் 8 ஆயிரம் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஜனவரி 23ஆம் தேதி முதல் ராமர் கோயில் வளாகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.22ஆம் தேதி மக்கள் யாரும் வரவேண்டாம் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதற்கிடையில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று முன்தினம் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி, அனைத்து மத்திய அரசு அலுவலகங்களும் ஜனவரி 22ஆம் தேதி அன்று அரை நாள் மூடப்படும், அதாவது மதியம் 2.30 மணிவரை அவை செயல்படாது. மேலும், வங்கிளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு நாள் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.