ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் ஜித்தேஷ் சர்மா விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார். மூன்றாவது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், அவர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. தென்னாப்பிரிக்கா மண்ணில் விளாசிய சதம் காரணமாகவே சஞ்சு சாம்சனுக்கு டி20 அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் சோபிக்க தவறியுள்ளார்.
திறமையான வீரரான அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுப்பதில்லை என பிசிசிஐ மீது பலரும் தொடர்ந்து அதிருப்தி தெரிவித்து வந்தனர். அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்தால் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உயருவார் என்று கூறினர். ஆனால், வாய்ப்புகளை கொடுக்காமல் சஞ்சு சாம்சனை இந்திய அணி புறக்கணிப்பதாக விமர்சிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக ஆடிய அவர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியில் கோல்டன் டக்அவுட்டாகி வெளியேறினார். இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் விவி கிரி அளித்துள்ள பேட்டியில், “சஞ்சு சாம்சனுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு தரக்கூடாது. அவர் தொடர்ந்து வாய்ப்புகளை வீணடித்துக் கொண்டே இருக்கிறார். இது இந்திய அணிக்கு நல்லதல்ல” என்று கூறியுள்ளார். விவி கிரி மேலும் கூறுகையில், “வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோகித் சர்மா ஜாம்பவானாக உயர்ந்துவிட்டார். அவரும் விராட் கோலி நிச்சயம் இந்திய டி20 அணியில் இருக்க வேண்டும். இவர்கள் இருவருக்கும் மாற்று வீரர்களே கிடையாது. அதனால் பெயருக்காக கூட இனியும் ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சனை டி20 அணிக்குள் கொண்டு வருவது பைத்தியக்காரத்தனம்” என்று கூறியுள்ளார்.
ஜூன் மாதம் 20 ஓவர் உலக கோப்பை நடைபெற இருக்கிறது. அதில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக யாரை சேர்க்கலாம் என பிசிசிஐ ஆலோசித்து வந்தது. அந்த இடத்துக்கு தேர்வாக சஞ்சு சாம்சனுக்கும் ஒரு வாய்ப்பு இருந்த நிலையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் கோல்டன் டக்அவுட்டாகி வாய்ப்பை வீணடித்துவிட்டார். இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் அபாரமாக ஆடினால், 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற இன்னும் ஒரு மயிரிழையிலான வாய்ப்பு இருக்கிறது.