புதுச்சேரி: புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் ஆரியப் பாளையம் பாலம் பணிக்கு, சர்வீஸ் சாலை அமைக்காததால், புழுதி பறக்கும் மண் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சுவாச நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை. இதில், எம்.என். குப்பம் முதல் புதுச்சேரி இந்திராகாந்தி சிக்னல் வரை சாலை விரிவாக்கம், சென்டர் மீடியன், வாய்க்கால் பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆரியப்பாளையம்- சங்கராபரணி ஆற்றுப் பாலம் அமைக்கும் பணியால் வடமங்கலம் பகுதியில் 500 மீட்டர் தொலைவுக்கு மாற்றுப்பாதையாக மண் சாலை அமைத்துள்ளனர். இதில் கனரக வாகனங்கள் செல்லும் போது எழும் புழுதியால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இதுதொடர்பாக வாகனஓட்டிகள் கூறுகையில், “வில்லியனுார் புறவழிச்சாலையில் 2 இடங்களிலும், சுல்தான்பேட்டையில் 2 இடங்களிலும் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணி முடிந்தாலும் தார்ச் சாலை அமைக்கவில்லை. இதிலிருந்து எழும் புழுதி வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்கிறது.
புழுதிக்குள் சிக்கி வெளியே வரும்போது, முகம், உடல் முழுவதும் தூசி படிகிறது. இச்சாலையை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கு, அலர்ஜி, சுவாச குழாய் பாதிப்பு ஏற்படுகிறது. காரில் கண்ணாடியை ஏற்றிவிட்டு ஏ.சி.யில் செல்வோருக்கு புழுதி பறக்கும் சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் நிலைமை புரியாது. முதல்வர் ரங்கசாமி இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு, அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல், பகல் நேரத்தில் இச்சாலையை ஆய்வு செய்தால், உண்மை நிலைமை புரியும்.
ஆரியப்பாளையம் பாலம் பணிக்காக பயன்படுத்தும் மாற்றுப் பாதையை தார்ச் சாலையைாக அமைக்க வேண்டும். பைபாஸில் முடிக்கப்பட்ட வாய்க்கால் பாலத்தில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். மூலக்குளம் முதல் என்.என்.குப்பம் வரை சாலையில் குவிந்துள்ள மணல் குவியல்களை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.
மரண பயத்தில் வாகன ஓட்டிகள்: இப்பகுதியில் தினமும் டூவீலரில் செல்வோர் கூறுகையில், “தினமும் இச்சாலையில் செல்வது மரண பயத்தை ஏற்படுத்துகிறது. இரவில் விளக்கு வெளிச்சமே இல்லை. குழந்தைகளுடன் டூவீலரில் போகும்போது புழுதியில் சிக்கித் தவிக்க வேண்டியுள்ளது. மேம்பாலம் அமைத்தால் சர்வீஸ் சாலை அமைக்கவேண்டும். அது தார்ச்சாலையாக இருக்கவேண்டும். இது டெண்டரில் உள்ளது. ஆனால் 200 மீட்டர் தொலைவுக்கு வெறும் மண் சாலையாகவே வைத்துள்ளது தவறு” என்றனர்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம்: புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் மூலக்குளம் முதல் தக்ககுட்டை வரை கார்களை ஏற்றி வரும் பிரமாண்ட கன்டெய்னர் லாரிகளை சாலையின் இரு பக்கங்களிலும் வரிசையாக நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலையின் அகலம் சுருங்கி விடுகிறது. இந்தப் பகுதி சாலையை கடந்து செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மரண பயத்துடனே கடந்து செல்கின்றனர்.
இச்சாலையில் அதிவேகமாக பேருந்து வரும்போது, பேருந்து பக்கத்தில் செல்லும் பைக்குகள் அச்சமடைந்து ஓரமாக செல்ல முயற்சிக்கும்போது, சாலையோரம் நிற்கும் கன்டெய்னர் லாரியில் மோதி விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
வடமங்கலம் பகுதியில் ஏராளமான கன்டெய்னர் லாரிகள் சாலைகளில் நிறுத்தி வைத்துள்ளனர். சாலைகளில் கன்டெய்னர் லாரிகள் நிறுத்துவதை நிரந்தரமாக தடை செய்ய போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஆபத்தான மதகடிப்பட்டு வளைவு பகுதி: இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருபுவனை தொகுதி செயலாளர் ரவி கூறுகையில், “கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளதால் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை அறிவித்துள்ளனர். இதனால் விழுப்புரத்தில் இருந்து வரும் வாகனங்கள் கலிதீர்த்தாள் குப்பம், பி.எஸ்.பாளையம், வாதனூர், செல்லிப்பட்டு, வில்லியனூர் வழியாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மதகடிப்பட்டு வளைவு பகுதி வாகனங்கள் செல்வதற்கு ஏற்றவாறு இல்லை. இந்த வளைவு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை வாய்க்கால் மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அச்சத்தோடு பயணிக்க கூடிய சூழல் இருக்கிறது.
குறுகலான சாலையால் அதிகரிக்கும்விபத்து: மதகடிப்பட்டு முதல் கலிதீர்த்தாள் குப்பம் வரை உள்ள சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மதகடிப்பட்டு வளைவில் இருக்கிற சாலையை சரி செய்ய வேண்டும். சாலை ஓரம் உள்ள பாதாளச் சாக்கடை மூடப்பட வேண்டும். அந்தப் பகுதியில் சாலையை அகலப்படுத்த வேண்டும். இதேபோல் இருசக்கர வாகனங்கள் திருவண்டார்கோயில், கொத்தபுரிநத்தம், வணத்தாம்பாளையம், பங்கூர் வழியாக புதுச்சேரி செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் குறிப்பாக கொத்தபுரி நத்தம்,வணத்தாம் பாளையம் ஆகிய பகுதிகளில் சாலை படுமோசமாக செல்ல முடியாத அளவு இருக்கிறது. மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரிக்கு வரும் மாணவர் பேருந்துகளை, மதகடிப்பட்டில் இருந்து இடது புறமாக சென்று மருத்துவக் கல்லூரிக்கு செல்லும் பாதையில், தேசிய நெடுஞ்சாலையில் சென்டர் மீடியனை அப்புறப்படுத்தி பேருந்துகள் திரும்புவதற்கு வழி செய்ய வேண்டும்.
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார் கோயில் பகுதிகளில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் வாகனங்கள் பயணம் செய்வதற்கு மேற்கண்ட ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும் அப்படி செய்யத் தவறினால் இப்பகுதி மக்களை ஒன்று திரட்டி மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.