India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் (IND vs ENG Test Series) வரும் ஜன. 25ஆம் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரை விளையாட இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெறுகிறது. தொடர்ந்து, விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சி, தரம்சாலா ஆகிய நகரங்களில் அடுத்தடுத்து நடைபெறுகிறது.
இந்தியாவில் முதல்முறையாக பாஸ்பால்
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணி (Team India) அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) உடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் டாப் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டரில் மிரட்ட உள்ளனர். விக்கெட் கீப்பர் பேட்டர்களாக கேஎல் ராகுல், கேஎஸ் பரத், துருவ் ஜூரேல் ஆகியோரும், ஆல்-ரவுண்டர்களாக அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோரும் உள்ளனர். குறிப்பாக, முழுநேர பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், முகேஷ் குமார், சிராஜ், ஆவேஷ் கான், துணை கேப்டன் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து அணி (Team India) தனது டெஸ்ட் கிரிக்கெட்டில் பாஸ்பால் (Bazball Cricket) பாணியை தொடங்கிய பின்னர் முதல்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. குறிப்பாக, இந்திய மண்ணில் நடப்பதால் சுழற்பந்துவீச்சை ஸ்டோக்ஸ் – மெக்கலமின் இங்கிலாந்து அணி எப்படி எதிர்கொள்ள உள்ளது என்பதிலும் பலர் ஆர்வமாக உள்ளனர்.
பாடம் எடுத்த பீட்டர்சன்
இந்தியாவுக்கு கடந்த முறை 2021ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியை இந்தியா 3-1 என்ற கணக்கில் வென்றது நினைவுக்கூரத்தக்கது, அதில் சுழற்பந்துவீச்சு மிக முக்கிய பங்கற்றியது. அதிலும், இந்திய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) சமாளிப்பதே அவர்களுக்கு பெரும் தலைவலியாய் இருக்கும்.
அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்டர் கெவின் பீட்டர்சன் (Kevin Peterson), அஸ்வினை எப்படி எதிர்கொண்டு விளையாடினார் என்பது குறித்து விளக்கி உள்ளார். ஊடகம் ஒன்றில் பேசிய அவர், “நான் அஸ்வினின் ‘தூஸ்ரா’ வகை பந்தை சிறப்பாக விளையாடி உள்ளேன். அவர் தனது ரன்-அப்பின் முன்னரே கை விரலில் பந்தை தூஸ்ராவுக்கு தயாராக வைத்துவிடுவார்.
இப்போதும் அவர் அதைச் செய்கிறார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு ஆஃப்-ஸ்பின்னராக தனது கையில் பந்து தெரியும்படி எடுத்துக்கொண்டு ஓடவர மாட்டார். முன்னர் அதை தூஸ்ராவிற்காக மாற்றினார். நீங்கள் அப்படி செய்வது கடினம். அவர் அதை முன்கூட்டியே கைவிரலில் லோட் செய்கிறார்.
ஆனால் ஒன்று…
அவர் பந்துவீசப் போகும் போது நான் 100 சதவீதம் நம்பிக்கையுடன் இருந்தேன். நான் அவரை ஆஃப் சைடில் எத்தனை முறை அடித்துள்ளேன் என்பதை நீங்கள் காணலாம். நான் அவரது ரன்னப்பின் பின்புறத்தில் தூஸ்ராவைப் பார்ப்பேன். மேலும் அவர் லெக்-சைடில் பீல்டர்களை நிறைய வைத்திருந்ததால், பந்து மிகவும் திரும்பினாலும் நான் ‘பவுண்டரி அல்லது சிக்ஸருக்கு’ அடிக்க நினைப்பேன்.
உங்கள் கால்கள் நன்றாக இருந்தால், நீங்கள் உங்கள் முன் கால்களை நடுங்காமல், பந்து வரும் லைனில் விளையாடுகிறீர்கள் என்றால், நீங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். நீங்கள் போல்டு அல்லது எல்பிடபிள்யூ ஆகக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என இங்கிலாந்து வீரர்களுக்கு அறிவுரை தெரிவித்தார்.