"என் மகன் நந்தன், சி.பி.எம் கட்சியில் இணைந்தது இப்படித்தான்!" – சுஹாசினி மணிரத்னம்

இயக்குநர் மணிரத்னம் – சுஹாசினியின் மகன் நந்தன்(31), சிறு வயது முதலே அரசியலில் ஆர்வம் கொண்டவர்.

தனது 15 வயதிலேயே லெனினிஸம் சார்ந்த ‘Contours of Leninism’ என்ற சிறு புத்தகத்தை எழுதியுள்ளார். சி.பி.எம் கட்சியிலும் ஆர்வத்துடன் இயங்கி வந்தவர். இந்நிலையில் கேரளா கண்ணூரில் நடைபெற்ற இரண்டாவது ‘Happiness Film Festival’ திரைப்பட விழாவில் பேசிய சுஹாசினி மணிரத்னம், தனது மகன் நந்தன் குறித்தும் அவரது அரசியல் ஈடுபாடு குறித்தும் பேசியுள்ளார்.

சுஹாசினி, நந்தன்

இது குறித்துப் பேசியுள்ள சுஹாசினி, “நந்தன் மற்ற குழந்தைகளைப் போல் அல்ல. பள்ளியிலிருந்து வந்தவுடனே பாராளுமன்றத்தில் நடந்த உரைகளைக் கேட்க ஆரம்பித்துவிடுவான். இப்படியொரு பிள்ளையைப் பெற்றிருக்கிறேன் என்று நானே ஆச்சரியப்படுவேன். 12 வயதிலேயே ‘மூலதனம்’ (Das Kapital) புத்தகத்தை எடுத்து வாசிப்பான். ஒருநாள் கையில் புத்தகங்களை எடுத்துக்கொண்டு அவனாகவே சி.பி.எம் அலுவலகத்திற்குச் சென்றுவிட்டான்.

அங்கிருந்தவர்கள் இவன் காரில் வருவதைப் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக காரை வேறு இடத்தில் பார்க் செய்யச் சொல்லியிருக்கிறான். பிறகு அலுவலகத்திற்கு வந்த நந்தனை அவர்கள் யார், எங்கிருந்து வருகிறான் என்றெல்லாம் கேட்கவில்லை. முதலில் அவர்கள் கேட்டது ‘சாப்பிட்டாயா’ என்றுதான். இதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு.

சுஹாசினி, நந்தன்

சாப்பிட்ட பின் நந்தன் கட்சியின் செயலாளரைச் சந்தித்துப் பேசியுள்ளான். அப்போது அவர் தந்தையின் பெயரைக் கேட்க, நந்தனோ மணிரத்னத்தின் உண்மையான பெயரான ‘கோபால ரத்னம் சுப்ரமணியன்’ என்ற பெயரைக் கூறியுள்ளான். என் பெயரையும் சேர்த்துக் கூறிய பிறகுதான் அவர் நந்தனை மணிரத்னம் – சுஹாசினியின் மகன் என்று அடையாளம் கண்டனர். அதன்பிறகுதான் அவன் சி.பி.எம் கட்சியின் உறுப்பினராக மாறினான்” என்று தன் மகனைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.