திரைத்துறையை தாண்டி நடிகர்கள் பலரும் தங்களை விவசாயத்தில் முனைப்போடு ஈடுபடுத்திக் கொள்கின்றனர். நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் நடிகர் தம்பி ராமையா. யதார்த்தமான தனது நடிப்பினால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.

`மைனா’ திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்காக `துணை நடிகருக்கான தேசிய விருது’ வென்றார். தொடர்ந்து திரைத்துறையில் ஈடுபாட்டோடு செயல்பட்டு வரும் தம்பி ராமையா, சமீபத்தில் யூடியூப் தளத்திற்கு அளித்த நேர்காணலில் தனது விவசாய அனுபவம் குறித்து பகிர்ந்திருந்தார்.
அவர் பேசுகையில், “நான் பிறந்தது ஒரு குக்கிராமத்துல, திருமயம் சட்டமன்ற தொகுதி புதுக்கோட்டை மாவட்டம். ராராபுரம் மலைக்கோயிலுக்கு இந்த பக்கமும் ஆறு, அந்த பக்கமும் ஆறு. நடுவுல எங்க ஊரு.

எங்களுக்கான பூர்விக பழைய வீட்டைச் சுற்றி சீமைக்கருவேல முள்ளு மரங்கள், வீட்டுக்கு முன்னாடி இருக்கும். எனக்கு கோழி வளர்ப்புல ரொம்ப ஆர்வம் இருந்தது. வீட்டுக்கு மூத்த பையானா இருந்ததால எங்க அம்மா கோழி வளர்க்குற காசெல்லாம் நீ வச்சுக்கப்பானு கொடுத்துடுவாங்க. எட்டு, ஒன்பது வயசுலேயே கோழி வளர்க்குறதுல இன்ட்ரெஸ்ட் இருந்தது.
வீட்டுக்கு ஒதுக்கப்புறம் சீமைகருவேல முள் இருக்குறதால பருந்து கோழி குஞ்சுகளை தூக்காது. நான் 15 முட்டை அடை வெச்சா, 15 குஞ்சும் பொரிச்சு, வளந்துடும். மயில் வளர்ப்பை திட்டமிட்டு பண்ணல. அங்க காடுங்குறதால ஒவ்வொரு பருவத்துக்கு ஒரு பழம் பறிக்க போவோம். களாக்காய், ஈச்சங்காய், நாவல்பழம், இலந்தை பழம்னு பறிக்க போவோம்.
ஒருமுறை சூரைப்பழம் பறிக்கப்போகும்போது, ஓர் இடத்தில் 5 மயில் முட்டை இருந்தது. வீட்டுக்கு அந்த முட்டையை எடுத்து வந்து அடைகாக்குற கோழிக்கிட்ட அந்த முட்டையை வைச்சேன். வழக்கமா கோழி முட்டைகள் 19-21 நாள்கள்ல குஞ்சு பொரிச்சுடும். மயில் முட்டைகள் 20 நாள்கள் ஆகியும் குஞ்சுப் பொரிக்கல.
அடையில இருக்கும்போது கோழிகள் உணவு உண்ணாது. ரெண்டு நாளைக்கு ஒரு முறை கீழே இறங்கும் ரத்தம் சுண்டி போயிருக்கும். உடலில் இருக்குற சத்தையெல்லாம் வெப்பமா மாத்தி கொடுத்து குஞ்சு பொரிச்சு வர்றதுக்கு உதவி கொண்டிருக்கும். அதனால கோழி அசந்து போயிடும்.

எனக்கு மாமா இருந்தார். அவருக்கும் என்னோட பேரு தான். மாற்றுத்திறனாளி. மாமா 20 நாள் ஆகியும் குஞ்சு பொரிக்கல மாமானு அவர்கிட்ட முட்டையை கொடுத்தேன். அப்பறம் அவர் அடைக்கு வெச்சாரு. 40 நாள்கள் கழிச்சு குஞ்சு பொரிச்சது. கொஞ்சம் பருவம் வந்ததும், `மாப்பிள்ளை முட்டை கொண்டு வந்தது நீங்க, கோழியை 20 நாள் அடைகாத்தது நீங்க, அதனால உங்களுக்கு 3 மயிலு, எனக்கு ரெண்டுனு’ சொல்லி கொண்டு வந்து கொடுத்துட்டாரு.

அதன்பிறகு ராமநாதபுரத்துல இருந்து ஆடுகள் மேய்ச்சுட்டு வருவாங்க. அதுமாதிரியே வாத்தும் கூட்டமா வந்துச்சு. சாயந்திரம் நேரத்துல வாத்துகள் முட்டைகள போட்டுட்டே போகுது. வாத்து முட்டை போடுறத பின்னால வர்றவங்க எடுத்துப்பாங்க. அதை பார்த்ததும் எனக்கு ஒரு ஆசை. அப்போ 30 வாத்து முட்டைகள வாங்கிட்டு வந்து மூணு அடைகாத்த கோழிக்குஞ்சை பத்து பத்து முட்டையா பிரிச்சு வச்சாச்சு. 28 நாள்ல 30 வாத்து குஞ்சும் பொரிச்சிடுச்சு.

எங்களோடது விவசாய குடும்பம். விவசாயத்துல எனக்கு தெரியாதது எதுவுமில்ல. விதை நெல்லிலிருந்து அதை பதப்படுத்துறது, நாற்றங்கால் நடுறது, கதிர் அடிக்கிறது, பயிர் அறுத்து களத்துக்கு கொண்டு போறது எல்லாம் செஞ்சு இருக்கோம்.
முதல்ல களத்துல அடிச்ச நெல்லை வித்துடுவோம். மாட்டை வெச்சு புனை ஓட்டி நெல்லை வீட்டுக்கு வெச்சுக்குவோம். புனையில கிடைக்கிற அரிசியைத் தான் வீட்டுக்கு பயன்படுத்திப்பாங்க. இன்னும் விவசாய குடும்பங்களில் நல்ல நெல்லை நாட்டுக்கு கொடுத்துட்டு புனை சுருட்டப்பட்ட நெல்லை தான் வீட்டுக்கு வெச்சுக்குறாங்க’’ என அந்த நேர்க்காணலில் பேசியுள்ளார்.