பாகல்கோட்:காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஜோடியை, பெண்ணின் பெற்றோர் பிரித்தனர். மனைவியை நினைத்து கணவர் கண்ணீர் வடிக்கிறார்.
பாகல்கோட் ஜமகண்டி நாகனுார் கிராமத்தில் வசிப்பவர் சித்தார்த், 30. ராஜஸ்தானின் ராஜசமந்தா மாவட்டத்தின், தசானா கிராமத்தை சேர்ந்தவர் ரோடியா கன்வார், 25. இவர்கள் இருவரும் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள்.
காதல்
ஏழு மாதங்களுக்கு முன்பு, இருவருக்கும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலம் பழக்கம் ஏற்பட்டது. எஸ்.எம்.எஸ்., மூலம் பேசினர். பழகிய ஒரு சில நாளில் காதல் வயப்பட்டனர். ஆனால் காதலுக்கு ரோடியாவின், குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராஜஸ்தான் சென்ற சித்தார்த், ரோடியாவை அவரது குடும்பத்தினருக்கு தெரியாமல், நாகனுார் அழைத்து வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் பற்றி அறிந்ததும், ரோடியாவின் சகோதரர், ராஜஸ்தான் போலீசாருடன், நாகனுார் வந்து, ரோடியாவை அழைத்துச் சென்றார்.
இதுகுறித்து சித்தார்த் தரப்பில், போலீசில் புகார் எதுவும் அளிக்கவில்லை.
சட்டப்படி நடவடிக்கை
இரண்டு நாட்களுக்கு முன்பு, சித்தார்த்திடம் வீடியோ காலில் பேசிய ரோடியா, ‘நீங்கள் என்னை அழைத்துச் செல்ல வரவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன்’ என்று சைகையில் கூறியுள்ளார்.
இதையடுத்து, காதல் மனைவியை மீட்டு தரும்படி, பாகல்கோட் எஸ்.பி., அமர்நாத் ரெட்டியிடம், சித்தார்த் மனு அளித்தார்.
இதுகுறித்து எஸ்.பி., கூறுகையில், ”சித்தார்த்தும், ரோடியாவும் வீட்டில் வைத்து, திருமணம் செய்து உள்ளனர். ஆனால் திருமணத்தை பதிவு செய்யவில்லை. இதனால் ரோடியாவை, ராஜஸ்தான் போலீசார் எளிதில் அழைத்துச் சென்றுவிட்டனர்.
”ரோடியாவை குடும்பத்தினரிடம் இருந்து மீட்டு, சித்தார்த்த்திடம் சேர்க்க, சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.
காதல் மனைவி எப்போது தன்னிடம் மீண்டும் வருவார் என்று, கண்ணீருடன் சித்தார்த் காத்திருக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்