புதுடெல்லி: 40 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் இந்த சாரட் வண்டியில் பயணித்துள்ளார்.
75வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.
முன்னதாக, டெல்லியில் நடைபெறும் சிறப்பு அணிவகுப்பில் தலைமை விருந்தினராக பங்கேற்க பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரை இன்று குடியரசு தின விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தன்னுடன் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வந்தார். சாரட் வண்டியின் முன்னும் பின்பும் குதிரையில் வீரர்கள் அணிவகுத்து வந்தனர்.
சாரட் வண்டியின் ப்ளாஷ்பேக்: 40 வருடங்களுக்கு பிறகு இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர் இந்த சாரட் வண்டியில் பயணித்துள்ளார். ஆம், ஆறு குதிரைகள், தங்க முலாம் பூசப்பட்ட விளிம்புகள், சிவப்பு வெல்வெட் சீட் உள்ள இந்த சாரட் வண்டி நீண்ட நெடிய வரலாறு கொண்டது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவின் வைஸ்ராய்க்கு சொந்தமானது இந்த குதிரை வண்டி. குடியரசு தின விழா போன்ற சம்பிரதாய விழாக்களுக்கு செல்வதற்கும், தோட்டத்தைச் சுற்றிப் பயணிக்கவும் அப்போது இந்திய வைஸ்ராயாக இருந்தவர்கள் இந்த சாரட் வண்டியை பயன்படுத்தியுள்ளனர்.
பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்குவந்த பின் இந்தியாவும் புதிதாக உருவான பாகிஸ்தானும் இந்த சாரட் வண்டிக்காக போட்டிபோட்டன. எந்த நாடு இந்த வண்டியை சொந்தம் கொண்டாடுவது என விவாதம் கிளம்ப, இறுதியாக இருநாடுகளும் டாஸ் போட்டு முடிவெடுக்க ஒப்புக்கொண்டன. அதன்படி, இந்தியாவின் கர்னல் தாக்கூர் கோவிந்த் சிங் மற்றும் பாகிஸ்தானின் சஹாப்ஜாதா யாகூப் கான் ஆகியோர் முன்னிலையில் டாஸ் போடப்பட்டது. டாஸின் படி இந்தியாவுக்கு வெற்றி கிடைக்க சாரட் வண்டி இந்தியாவின் வசமானது.

இதன்பின் பதவியேற்பு விழாவுக்காக ராஷ்டிரபதி பவனில் இருந்து நாடாளுமன்றத்துக்கு செல்வது போன்ற நிகழ்வுகளுக்கு குடியரசுத் தலைவர்கள் இந்த வண்டியை பயன்படுத்தி வந்தனர். சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக இந்த வண்டியை பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. மாறாக குண்டு துளைக்காத கார்களில் குடியரசுத் தலைவர் அழைத்து வரப்பட்டார்.
விதிவிலக்காக 2014ம் ஆண்டில் குடியரசுத் தின விழாவின் மூன்றாம் நாள் கொண்டாடப்படும் பீட்டிங் ரிட்ரீட் விழாவில் கலந்து கொள்ள அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த குதிரை வண்டியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், 40 ஆண்டுகளாக குடியரசுத் தின விழாவின்போது கொடியேற்ற வருகை தரும்போது எந்தவொரு குடியரசுத் தலைவரும் இந்த வண்டியை பயன்படுத்தவில்லை. 40 ஆண்டுகாலங்களில் முதல் முறையாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று இந்த சாரட் வண்டியை பயன்படுத்தியுள்ளார்.