Judges conflict of power case: Hearing in Supreme Court today | நீதிபதிகளின் அதிகார மோதல் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

புதுடில்லி: கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே யார் பெரியவன் என்ற அதிகார மோதல் விவகாரம் தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன சிறப்பு அமர்வு விசாரணை நடத்தி பிரச்ணைக்கு தீர்வு காண்கிறது.

மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு, கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதி சோமன்சென் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் இடைகால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவு தொடர்பான உண்மை அறிந்த மற்றொரு நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யாயா, தாமாக முன் வந்து வழக்கில் தலையிட்டு மீண்டும் சி.பி.ஐ., விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

விசாரணையில் மருத்துவகல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீட்டு சலுகைக்காக போலி சாதி சான்றுகள் இணைத்திருப்பதும் இதில் அரசியல் பின்புலம் உள்ளதாகவும் தெரியவந்தது.

இந்நிலையில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நீதிபதி சோமன் சென்னிற்கும், வழக்கை தாமாக எடுத்து மீண்டும் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாயாவிற்கும் இடையே யார் அதிகாரமுள்ளவன் என்ற ‛ஈகோ’ எழுந்தது.

இந்நிலையில் அபிஜித் கங்கோபாத்யாயா இடமாற்றம் செய்ய அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதையறிந்த நீதிபதி கங்கோபாத்யாயா, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முறையிட்டு வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்ற வரலாற்றில் இது போன்ற வழக்கை சந்திக்காத உச்சநீதிமன்றம் , இதற்காக அரசியல் சாசன சிறப்பு அமர்வை ஏற்படுத்தியுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வு இன்று காலை 10:30 மணிக்கு விசாரணை நடத்துகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.