புதுடெல்லி: நாட்டின் ராணுவ வலிமை, அறிவியல் வளர்ச்சி, கலாச்சார பெருமையை பறைசாற்றும் வகையில் டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெற்றது.
நாடு முழுவதும் 75-வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணி அளவில் அஞ்சலி செலுத்தினார். 10.25 மணி அளவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும், சிறப்பு விருந்தினரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானும் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் கடமைப் பாதைக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர், 21 பீரங்கி குண்டுகள் முழங்க, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து, கடமை பாதையில் கண்கவர் அணிவகுப்பு தொடங்கியது. முதலில் நாட்டுப்புற இசைக் குழு அணிவகுத்தது. இதில், பாரம்பரிய இசைக் கருவிகளை இசைத்தபடி 100 பெண்கள் நடனமாடி சென்றனர்.
பல்வேறு படைப் பிரிவுகளில் வீரதீர விருது பெற்றவர்கள் தனித்தனி வாகனத்தில் அணிவகுத்து வந்து குடியரசுத் தலைவருக்கு மரியாதை செலுத்தினர்.
டி-90 பீஷ்மா பீரங்கிகள், நாக், பினாகா ஏவுகணைகள் கம்பீரமாக அணிவகுத்து வந்தன. பிரான்ஸ் ராணுவத்தின் 30 கலைஞர்கள் இசைக் கருவிகளை இசைத்தவாறு அணிவகுத்தனர்.
முதல்முறையாக முப்படைகளுக்கும் பெண்கள் தலைமையேற்று அணிவகுப்பை நடத்தினர். பைக்குகளில் வீராங்கனைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி மெய்சிலிர்க்க வைத்தனர். அக்னி வீராங்கனைகளின் அணிவகுப்பை கேப்டன்சந்தியா தலைமையேற்று நடத்தினார். ராணுவத்தின் மெட்ராஸ் படைப்பிரிவின் தம்பி அணியை கேப்டன் யாஷ் தலைமையேற்று வழிநடத்தினார்.
தேசிய சிறார் விருதை வென்ற 19 சிறுவர், சிறுமிகள் வாகனங்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சிறுவர்கள் கையசைக்க, அவர்களை நோக்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் கையசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஊர்வலம் வந்த பால ராமர்: தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், உத்தர பிரதேசம் உட்பட 16 மாநிலங்களின் அலங்கார வாகனங்கள் அணிவகுப்பில் இடம்பெற்றன.
அயோத்தியில் பால ராமர் கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது. இதை குறிக்கும் விதமாக, உத்தர பிரதேச மாநில அலங்கார வாகனத்தில் அயோத்தி பால ராமர் வில், அம்புடன் கம்பீரமாக சென்றார்.
மத்திய உள்துறை, வெளியுறவு துறை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) என 9 மத்திய அரசு துறைகளின் அலங்கார வாகனங்களும் பங்கேற்றன. மின்னணுவாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு நடப்பது போன்றகாட்சி, தேர்தல் ஆணையத்தின் அலங்கார வாகனத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது. இஸ்ரோ வாகனத்தில் ராக்கெட், பூமி, சந்திரன், விண்கலம், லேண்டருடன் சந்திரயான்-3 திட்டத்தின்வெற்றி காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் குடவோலை வாகனம்: தமிழகத்தின் அலங்கார வாகனத்தில் சோழர்கால குடவோலை தேர்தல் முறை காட்சிப்படுத்தப்பட்டது. ‘குடவோலை கண்ட தமிழ்குடியே’ என்றபாடலும் எழுச்சியுடன் இசைக்கப்பட்டது. தமிழக பாரம்பரிய உடையணிந்த பெண்கள், பாடலுக்கு ஏற்ப நடனமாடினர். பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் எழுந்து நின்று கைதட்டி ரசித்தனர்.
அணிவகுப்பின்போது, விமானப் படையை சேர்ந்த சுகோய், ரஃபேல் உள்ளிட்ட 29 போர் விமானங்கள்,7 சரக்கு விமானங்கள், 9 ஹெலிகாப்டர்கள், ஒரு பாரம்பரிய விமானம் ஆகியவை பல்வேறு சாகசங்களை செய்தன. பிரான்ஸ் விமானப் படையைசேர்ந்த ரஃபேல் போர் விமானங்களும் வானில் சீறிப் பாய்ந்தன.
நாட்டின் ராணுவ வலிமை, அறிவியல் வளர்ச்சி, கலாச்சார பெருமையை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடைபெற்றது. நிறைவாக, பிரதமர் நரேந்திர மோடி கடமைப் பாதையில் நடந்து சென்றுபார்வையாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 13,000-க்கும் மேற்பட்டோர் அணிவகுப்பை கண்டு ரசித்தனர்.
பிரான்ஸ் அதிபர் நன்றி: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அணிவகுப்பில் கலந்துகொண்ட பிரான்ஸ் இசைக்குழுவின் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த குடியரசு தின விழாவின்மூலம் பிரான்ஸுக்கு மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருக்கிறது. அதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.