மாமல்லபுரம்செய்யாறு, அரசு கலைக்கல்லுாரி வரலாற்று கவுரவ விரிவுரையாளரும், தமிழர் தொன்மம் வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த வருமான மதுரைவீரன், பாலாற்று படுகையில் பண்டைய பொருட்களை கள ஆய்வு செய்து வருகிறார்.
இங்கு, பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள், ராஜராஜசோழன் கால செப்பு நாணயங்கள், வேறு காலத்து சதுர வெள்ளி நாணயம், பல்லவர் ‘போட்டின்’ உலோக நாணயங்கள், ஈய நாணயம் என, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்டு உள்ளன.
பழங்கால ஆண், பெண் அணிகலன்கள், பாண்டியாட்ட வட்டச்சில்லுகள், பழங்கால மண்குடுவை ஆகியவைகளும் கண்டெடுக்கப்பட்டன.
தற்போது, திருக்கழுக்குன்றம் அடுத்த ஈசூர் பாலாற்றில் சோழர் கால மண்பானை, ஆங்கிலேயர் செப்பு நாணயம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஈசூர் பாலாற்றில், ராஜராஜசோழன் செப்பு நாணயங்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் மற்ற பொருட்கள் கண்டெடுத்து வருகிறோம்.
தற்போது, ஈசூர் ஆற்றங்கரையில், சோழர் காலத்தைச் சேர்ந்த 2 லிட்டர் கொள்ளளவு, 5 மி.மீ., தடிமன் கொண்ட மண்பானை, 1803ம் ஆண்டு ஆங்கிலேயர் செப்பு நாணயம் ஆகியவை கிடைத்து உள்ளன.
தற்போதைய நவீன பிரஷர் குக்கரில் உள்ள நீராவி வெளியேற்றும் சாதனம் போன்ற அமைப்பு, பழங்கால பானையிலும் உள்ளது. மருந்து கலவை தயாரிக்கவோ, வேறு பயன்பாட்டிற்காகவோ, நீராவி வெளியேறும் வசதி யுடன் பானை உருவாக்கப்பட்டு இருக்கலாம்.
இத்தகைய கண்டுபிடிப்பு அக்காலத்திலேயே உருவாக்கி இருப்பது, வியப்பாக உள்ளது. நாணய முன்புறம், ஆங்கிலேயரின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி என ஆங்கில மொழியிலும், பின்புறம், பார்சி மொழி எழுத்துக்களும், ஐந்து காசுகள் என்றும் குறிப்பிடப்பட்டுஉள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்