புதுடில்லி, ஏடன் வளைகுடா பகுதியில், ஏவுகணை தாக்குதலால் பாதிக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் விடுத்த அவசர அழைப்பின்படி, நம் கடற்படையின் போர்க்கப்பல் விரைந்து சென்று, அந்த கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் மோதல் நடந்து வரும் நிலையில், செங்கடல், ஏடன் வளைகுடா உள்ளிட்ட பகுதிகளில் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஏமனில் இருந்து செயல்படும் ஹவுதி படையினர் இத்தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, ‘மார்லின் லாண்டா’ என்ற எண்ணெய் கப்பல் மீது, சமீபத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த கப்பலில், 22 இந்தியர்கள் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர்.
இத்தாக்குதலில், கப்பலின் ஒரு பகுதி தீப்பற்றி எரிந்தது. இதைஅடுத்து, அந்த கப்பல் சார்பில் அவசர உதவி கோரப்பட்டது. இதன்படி, சம்பவ இடத்துக்குச் சென்ற நம் கடற்படையின், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல், எண்ணெய் கப்பலில் இருந்த தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டது.
இந்தத் தகவலை, நம் கடற்படை தெரிவித்து உள்ளது.
இதே போல், கடந்த 18ம் தேதியும் ஏடன் வளைகுடா பகுதியில் சென்ற சரக்கு கப்பல் மீது, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானம் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
அப்போதும், ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க்கப்பல் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement