`அண்ணனை இழந்தபோது எடுத்த சபதம்' – 2 ஆண்டுகளில் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்த இளம்பெண்

நம் அருகிலிருந்த ஒருவரின் இழப்பு என்பது நமக்குள் எந்த அளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறதோ, அதே அளவுக்கு நேர்மறையான முடிவுகளை எடுக்கக்கூடிய தாக்கத்தையும் ஏற்படுத்தும். `இவ்வளவுதான் வாழ்க்கை…’ என பிறர் மீது அன்பு செலுத்துதல், உதவி செய்தல், அருகிலிருப்பவர்களைக் காயப்படுத்தாமலிருத்தல் போன்ற பல மாற்றங்களைச் செய்யும். அந்த வகையில், சமூகப் பணிப் படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்ற 26 வயது இளம்பெண் பூஜா ஷர்மா, தன்னுடைய அண்ணனை இழந்த பிறகு, அந்த துக்கத்தையே சமூகப் பணியாக மாற்றி, கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கேட்பாரற்ற இறந்த உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துவருகிறார்.

உயிரிழப்பு

டெல்லியைச் சேர்ந்த இவர், இதுவரை மட்டும் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்திருப்பதாக அவரே கூறியிருக்கிறார். தன்னுடைய இந்தப் பணி குறித்தும், எந்த விஷயம் இதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்பது குறித்தும் ஊடகத்திடம் பேசிய பூஜா ஷர்மா, “30 வயதான என் மூத்த சகோதரர் ஒரு சிறிய சண்டையில் என் முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். சரியாகச் சொன்னால், 2022-ல் மார்ச் 13-ம் தேதி ஒரு சோகமான கொலையால் என் சகோதரனை இழந்தேன். இந்தச் செய்தியைக் கேட்டதும், என் தந்தை கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். அதன் பின்னர், எனது தனிப்பட்ட துக்கத்தை மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயமாக மாற்ற விரும்பினேன்.

ஆரம்பத்தில் குடும்பங்கள் உரிமை கோராத அல்லது இருப்பிடம் பற்றி தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களைப் பெற காவல்துறை, அரசு மருத்துவமனைகளை தொடர்புகொண்டேன். இப்போது காவல்துறையும், அரசு மருத்துவமனைகளும், உரிமை கோரப்படாத உடல்கள் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்தால், உடனடியாக என்னைத் தொடர்புகொள்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் அவ்வாறு கேட்பாரற்ற, உரிமை கோரப்படாத, எந்தவொரு தகவலும் இல்லாத 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்திருக்கிறேன். இறுதிச்சடங்குகள் செய்ய சுமார் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை ஆகும். அதையும் என்னுடைய தாத்தாவின் ஓய்வூதியத்தில்தான் எல்லாவற்றையும் ஏற்பாடு செய்கிறேன்.

உயிரிழப்பு

இப்போது என்னுடைய தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கிறேன். என்னுடைய தந்தை டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக பணிபுரிகிறார். இருப்பினும், நான் செய்யும் இந்தப் பணியை பலரும் தடையாகப் பார்க்கிறார்கள். என் நண்பர்களின் குடும்பத்தினர் யாரும், தங்களின் பிள்ளைகளைச் சந்திக்க என்னை அனுமதிப்பதில்லை” என்று கூறினார். இவரின் இந்தப் பணியால், திருமணம்கூட இவருக்குத் தள்ளிப்போவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தனையையும் கடந்து இவர் செய்யும் இந்தப் பணி நிச்சயம் பாராட்டத்தக்கது. சமூகப் பணி மேலும் தொடர வாழ்த்துகள் பூஜா ஷர்மா…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.