காங்கிரஸ் சின்னம் இல்லாமல், லட்சுமண் சவதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்டு உள்ள, பேனர்களால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
பெலகாவி அதானி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமண் சவதி, 63. இவர் முன்பு பா.ஜ.,வில் இருந்தவர். துணை முதல்வர் பதவியிலும் இருந்து உள்ளார். சட்டசபை தேர்தலில் பா.ஜ., ‘சீட்’ கிடைக்காததால், காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்றார்.
இந்நிலையில் லட்சுமண் சவதி மீண்டும், பா.ஜ.,வுக்கு சென்று விடுவார் என்று, கடந்த சில தினங்களாக கர்நாடகா அரசியலில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வரும் 16 ம் தேதி, அவருக்கு பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அதானி நகரில் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்த பேனர்களில், காங்கிரஸ் கட்சியின் சின்னம் இல்லை. இதனால் அவர் காங்கிரசில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது. இதை லட்சுமண் சவதி மறுத்து உள்ளார்.
டில்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனது பிறந்தநாளை, நான் எப்போதும் கொண்டாடுவது இல்லை. கோவிலுக்கு மட்டும் செல்வேன். எனது பிறந்தநாளுக்கு, பேனர் வைக்க வேண்டாம் என்று சொல்கிறேன். ஆனால் தொண்டர்கள், ஆதரவாளர்கள் கேட்பது இல்லை. பா.ஜ.,வில் இருந்த போது, பேனர்களில் தாமரை சின்னம் இருப்பது இல்லை. ஜெகதீஷ் ஷெட்டருக்கும், எனக்கும் வித்தியாசம் உள்ளது. எனது கருத்து வேறு; அவரது கருத்து வேறு.
எக்காரணம் கொண்டும், காங்கிரசில் இருந்து விலக மாட்டேன். எனது உடலில் பா.ஜ., டி.என்.ஏ., இருப்பதாக கூறுகின்றனர். என் உடலில் எனது தந்தையின் டி.என்.ஏ., உள்ளது. பா.ஜ.,வில் அவமானப்படுத்தப்பட்டதால், காங்கிரஸ் வந்தேன். இங்கிருந்து மீண்டும் பா.ஜ., செல்ல, எனக்கு பைத்தியம் பிடிக்கவில்லை.
மத்திய அரசு கர்நாடகாவுக்கு மானியம் வழங்கவில்லை. நமது மாநில எம்.பி.,க்களிடம், நீங்கள் கர்நாடகாவில் இருந்து வெற்றி பெற்றீர்களா அல்லது குஜராத்தில் இருந்து வென்றீர்களா என்று, கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர்கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்