கொச்சி: தீவிரவாத சதித்திட்ட வழக்கில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்பவருக்கு கேரள நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் ரியாஸ் அபூபக்கர் குற்றவாளி என கொச்சியில் உள்ள என்ஐஏ நீதிமன்றம் கடந்த 7-ம் தேதி அறிவித்தது. இந்நிலையில் நேற்று அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1.25 லட்சம் அபராதமும் விதித்து என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுடன் அபூபக்கர் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும் அவர்களின் சித்தாந்தத்தை பரப்பி வந்ததாகவும் என்ஐஏ குற்றம் சாட்டியது.
“கொச்சியில் அபூபக்கர் சதி ஆலோசனை கூட்டங்களை நடத்தினார். இந்த ஆலோசனையில், நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக தற்கொலை தாக்குதல்களை நடத்த அவர் முடிவு செய்திருந்தார்’’ என்று என்ஐஏ குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.