புதுடெல்லி: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் சரண் சிங்கை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதித்து விட்டதாக அவரைச் சாடிய மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், “முன்னாள் பிரதமர் சரண் சிங்கை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று தெரிவித்தார். ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரியை மாநிலங்களவையில் பேச அனுமதித்த அவைத் தலைவரின் முடிவை மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து அவைத் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தலைவர்களுக்கு பாரத ரத்னா வழங்குவது குறித்து இங்கு விவாதம் நடக்கவில்லை. நான் அவர்கள் அனைவரையும் வணங்குகிறேன். ஆனால், உறுப்பினர்கள் ஒரு பிரச்சினையை எழுப்பும்போது, நீங்கள் (அவைத்தலைவர்) எந்த விதியின் கீழ் என்று கேட்பீர்கள். (நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்) எந்த விதியின் கீழ் அவர் (ஜெயந்த் சவுத்ரி) அவையில் பேச அனுமதிக்கப்பட்டார்.
எங்களுக்கும் பேச அனுமதி வழங்குங்கள். ஒருபுறம் நீங்கள் விதிகளைப் பற்றி பேசுகிறீர்கள். அதற்கு உங்களுக்கு விருப்ப உரிமை இருக்கிறது. அந்த விருப்ப உரிமை சட்டரீதியாக பயன்படுத்தப்பட வேண்டும், உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப இல்லை” என்று கார்கே தெரிவித்தார். இது, அவையில் பெரும் அமளிக்கு வழி வகுத்தது.
கார்கேவுக்கு பதில் அளித்து பேசிய அவைத் தலைவர், “இப்படியான மொழியை பயன்படுத்தினீர்கள். சவுத்ரி சரண் சிங்கை அவமதிப்பதை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். அவர் தூய்மையான பொது வாழ்க்கை, அப்பழுக்கற்ற நேர்மை மற்றும் விவசாயிகளுக்காக அர்ப்பணிப்புடன் இருந்தார்.
கிட்டத்தட்ட நீங்கள் சவுத்ரி சரண் சிங்கை அவமதித்து விட்டீர்கள். அவரது பெருமையை அவமதித்துவிட்டீர்கள். சரண் சிங்குக்காக உங்களிடம் நேரம் இல்லை. சவுத்ரி சரண் சிங் விவகாரத்தில் அவைக்குள் இதுபோன்ற சூழலை உருவாக்கி நாட்டின் ஒட்டு மொத்த விவாசாயிகளைக் காயப்படுத்தி விட்டீர்கள். நாம் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய கார்கே, “இது பெருமைக்குரிய விஷயம், முன்னாள் பிரதமர்கள் சவுத்ரி சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோரை வணங்குகிறேன்” என்றார்.
அமளிகளுக்கு இடையில் பேசிய மத்திய இணை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபலா, “சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்கப்படுவதை காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.
சபையில் சரண் சிங்கை காங்கிரஸ் அவமதித்தது அதிர்ச்சியாக இருக்கிறது என்று ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங் தெரிவித்தார். அவையில் அவர் பேசுகையில், “அடிப்படை உண்மைகளை புரிந்துகொண்ட, அடித்தட்டு மக்களின் குரலை புரிந்துகொண்ட, அவர்களை வலுப்படுத்த நினைக்கும் அரசால் மட்டுமே சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்க முடியும். அதற்காக நான் கடமைப்பட்டுள்ளேன்.
நான் இந்த எதிர்க்கட்சியில் 10 ஆண்டுகள் இருந்துள்ளேன். இந்த அவையில் சில காலம் இந்தப் பக்கம் இருந்திருக்கிறேன். இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளில் சவுத்ரி சரண் சிங் பார்வைகள் இருப்பதை நான் பார்க்கிறேன். பிரதமர் மோடி கிராமங்களில் கழிவறை பிரச்சினைகளை பற்றி பேசியபோது, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் இலக்கை நிர்ணயித்து அதுகுறித்து கிராமங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தியபோது, அதில் சரண் சிங்கின் மேற்கோள்கள் இருந்ததை நான் நினைவு கூறுகிறேன்” என்றார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது கருத்துகளுக்காக மாநிலங்களவைத் தலைவரிடமும், நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.