ரோகித் சர்மா: எல்லா வீரர்களின் அறைக்கும் செல்வேன்… எதற்கு தெரியுமா?

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, முதன்முறையாக தான் கேப்டனாக இருக்கும் சமயத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட பிறகு கேப்டனாக நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா இப்போது தன்னுடைய கேப்டன் பொறுப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறார். அதிகபட்சம் ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் தான் கேப்டனாக எப்படி செயல்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரோகித் சர்மா பேசும்போது, “ இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் அனைத்து வீரர்களின் அறைகளுக்கும் நான் தனிப்பட்ட முறையில் செல்வேன். அங்கு அவர்களுடன் கலந்துரையாடுவேன். அப்போது அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன? எப்படி செயல்பட விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்வேன். அது எனக்கும் அவர்களுக்கும் இடையிலான புரிதலை அதிகப்படுத்துகிறது. ஒருவேளை வீரர்களுடன் நேரத்தை செலவிடவில்லை என்றாலோ அல்லது அவர்களுக்கு பேசுவதற்கு நான் நேரத்தை ஒதுக்கவில்லை என்றாலோ அணிக்குள் சுமூகமான சூழல் இருக்காது. என்னை பொறுத்தளவில் நான் என்ன செய்ய முயற்சிக்கிறேன் என்றால் எல்லோரையும் சமமாக நடத்த முயல்கிறேன். ஒவ்வொருவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பின் மீது சர்ச்சைகள் எழத் தொடங்கியிருக்கும் நிலையில் இப்படியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அவர். ஏனென்றால் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இப்போது இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் அவர், அண்மையில் தான் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக நீண்ட நாட்களுக்குப் பிறகு விளையாட தொடங்கினார். 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை தோல்விக்குப் பிறகு அவருக்கு 20 ஓவர் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படாமலே இருந்தது. 

ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் கேப்டனாக திரும்பிய ரோகித் சர்மா, ஜூன் மாதம் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கேப்டன் பொறுப்புகளில் இருந்து விலக வாய்ப்புள்ளது. இந்த சூழலில் தன்னுடைய கேப்டன் செயல்பாடு குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறார் அவர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.