பாட்னா : பீஹாரில் புதிதாக அமைந்துள்ள முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, சட்டசபையில் இன்று நம்பிக்கை ஓட்டு கோருகிறது.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீஹார் முதல்வருமான நிதீஷ் குமார், சமீபத்தில் லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடனான கூட்டணியை முறித்தார். அதன்பின், பா.ஜ.,தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தார்.
இதையடுத்து, பீஹார் முதல்வராக ஒன்பதாவது முறையாக நிதீஷ் பதவியேற்ற நிலையில், பா.ஜ.,வைச் சேர்ந்த சம்ரத் சவுத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
இந்நிலையில், பீஹார் சட்டசபையில் இன்று, நிதீஷ் குமார் தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவுள்ளது. பீஹார் மாநில சட்டசபையில், மொத்த உறுப்பினர்கள்எண்ணிக்கை, 243. பெரும்பான்மைக்கு, 122 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தேவை.
நிதீஷ் குமாரின் தே.ஜ., கூட்டணி அரசுக்கு, 128 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.
இதில், பா.ஜ., 78; ஐக்கிய ஜனதா தளம் 45; ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா நான்கு மற்றும் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ., வின் ஆதரவு உண்டு. ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு, 114எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு உள்ளது.
இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கவிருப்பதை முன்னிட்டு, குதிரை பேரத்தை தடுக்க, எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், தங்களது உடைமை களுடன், முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவின் வீட்டில் சில நாட்களாக தங்கியிருக்கின்றனர்.
இதற்கிடையில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீஹார் சட்டசபை சபாநாயகர் அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக,நிதீஷின் தே.ஜ., கூட்டணி அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. எனினும், அவர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்