சென்னை: தெற்கு ரயில்வேயில் விபத்துகளை தடுக்கும் வகையில், சிக்னல்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரயில் விபத்துகள் நேரிட்டன. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநகர் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி நடைபெற்ற கோர விபத்தில் 280 பேர் உயிரிழந்தனர். மேலும், 1,100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு அக்டோபரில் காலி மின்சாரரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த டிசம்பரில் செங்கல்பட்டுஅருகே சரக்கு ரயிலின் 9 பெடடிகள் தடம்புரண்டதில், தண்டவாளம் சேதமடைந்து, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த இரு ரயில் விபத்துகளை தொடர்ந்து, தெற்கு ரயில்வேயில் சிக்னல் மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான பணிகள்நடைபெற்று வருகின்றன. பாதுகாப்பு மேம்படுத்தலின் ஒரு பகுதியாக, ரயில் மோதலை தடுக்கும் கவாச் முறை நிறுவுவது, சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: மனித தவறுகளை தவிர்க்க, தண்டவாளங்களை அமைக்கும் பணியில்இயந்திரங்களைப் பயன்படுத்துதல், வெல்டிங் பயன்பாட்டைக் குறைக்க, நீண்ட தண்டவாளங்கள் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகின்றன.
தண்டவாளங்களில் விரிசல் ஏற்படாமல் இருக்க, வெல்டிங் குறைக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், இன்ஜின்களில் உள்ள கட்டுப்பாட்டு சாதனங்கள் லோகோ பைலட்டுகளின் விழிப்புணர்வை மதிப்பிட உதவும். இதுதவிர, சாதாரண பெட்டிகளுக்கு மாற்றாக, எல்எச்பி என்ற நவீன பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.12,173 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தண்டவாளம் மேம்படுத்துதல் பணிக்கு 1,240 கோடியும், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு மேம்படுத்துதல் பணிக்கு ரூ.510 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, ரயில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும்.