கே.எல். ராகுல் விலகல் – இந்திய அணியில் மிரட்டல் வீரர் – இனி மிடில் ஆர்டர் பட்டையை கிளப்பும்!

India National Cricket Team: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி (IND vs AUS 3rd Test) வரும் பிப். 15ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் நடைபெற இருக்கிறது. பாஸ்பால் என்ற அதிரடி அணுகுமுறை மூலம் இங்கிலாந்து அணி (Team England), இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறது என்றே நாம் கூறலாம்.

இந்திய அணி (Team India) தனது டெஸ்ட் பாரம்பரிய ஆட்டத்திற்கும், இந்த அதிரடி அணுகுமுறைக்கும் நடுவே ஊசலாடிக் கொண்டிருக்கிறது எனலாம். சுழற்பந்துவீச்சில் வெளிநாட்டு பேட்டர்கள் எந்தளவிற்கு திணறுகிறார்களோ, அதேபோல் இந்திய அணி பேட்டர்களும் திணறுகிறார்கள் என்பதே நிதர்சனமாக உள்ளது. புஜாரா, ரஹானே போன்றார் ரஞ்சி டிராபியில் தங்களது திறனை வெளிப்படுத்தியே இந்திய டெஸ்ட் அணிக்குள் நுழைந்தனர். 

அப்படியிருக்க, தற்போது ரஞ்சி டிராபி தொடரில் (Ranji Trophy 2024) இருந்து வீரர்கள் இந்திய அணிக்கு வருவதே அரிதாகிவிட்டது என்ற விமர்சனம் எழுந்தது. இஷான் கிஷன் (Ishan Kishan) போன்றோர் தற்போது ஓய்வில் இருந்தாலும் ரஞ்சி கோப்பையை விளையாடாமல் ஐபிஎல் போட்டிகளுக்கு தங்களை தயார்படுத்தி வருவது பலரிடமும் கேள்விகளை எழுப்பியது. இப்போது, இங்கிலாந்து ஸ்குவாடில் இருக்கும் ரஜத் பட்டிதார், சர்ஃபராஸ் கான், ஆகாஷ் தீப் (Aakash Deep) போன்றோர் ரஞ்சி டிராபியில் சிறப்பாக விளையாடியவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

பிசிசிஐ எடுத்த திடீர் முடிவு…

அந்த வகையில், பிசிசிஐயின் தேர்வு கமிட்டியில் இருந்து சமீபத்தில் வீரர்களுக்கு ஒரு அறிவிப்பு சென்றிருக்கிறது. அதாவது, இந்திய வீரர்கள் யார் யார் என்சிஏவில் உடற்தகுதி தேர்ச்சிக்காக வருகிறார்களோ அவர்களை தவிர பிற வீரர்கள் ரஞ்சி டிராபியில் தங்களின் உள்ளூர் அணிகளுக்கு விளையாடியாக வேண்டும் என்றும் அப்போதுதான் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் கறாராக கூறியிருப்பதாக தகவல்கள் வெளியானது.

இது ஒருபுறம் இருக்க, விராட் கோலி (Virat Kohli), கேஎல் ராகுல், ஜடேஜா ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காவும், காயத்தாலும் இங்கிலாந்து தொடரில் இருந்து விலக ஷ்ரேயாஸ் ஐயரையும் பிசிசிஐ நீக்கியுள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டர் அனுபவமற்றதாக தோற்றமளிக்கிறது. சுப்மான் கில், ரஜத் பட்டிதார் (Rajat Patidar), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல் என இளம் வீரர்களே தென்படுகிறார்கள். கேஎல் ராகுல், ஜடேஜா வந்தால் மட்டுமே அணி வலுவாக காட்சியளிக்கும் என கூறப்பட்டது. 

தேவ்தத் படிக்கலுக்கு வாய்ப்பு

இந்நிலையில், முதல் டெஸ்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது டெஸ்டில் இருந்து விலகிய கேஎல் ராகுல் (KL Rahul Injury) தற்போது மூன்றாவது டெஸ்டில் இருந்து விலக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொர்ந்து அவருக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal) மாற்று வீரராக பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. சமீப காலமாக அவர் முதல் தர போட்டியில் தொடர்ந்து சதங்களை குவித்து வரும் அவருக்கு இந்திய அணி வாய்ப்பு வழங்கியிருக்கிறது. 

 NEWS: KL Rahul ruled out of third #INDvENG Test, Devdutt Padikkal named replacement. #TeamIndia | @IDFCFIRSTBank

Details https://t.co/ko8Ubvk9uU

— BCCI (@BCCI) February 12, 2024

2024ஆம் ஆண்டில் மட்டும் தேவ்தத் படிக்கல் ரஞ்சி டிராபியில் மூன்று சதங்கள், இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் என நான்கு சதங்களை அவர் அடித்திருந்தார். ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 193 ரன்களை அடித்தார். 

தேவ்தத் படிக்கலின் தேவை…

குறிப்பாக, கடந்த பிப். 9ஆம் தேதி முதல் இன்று வரை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் கர்நாடகா அணியும், தமிழ்நாடும் மோதின. இதில், கர்நாடக அணியில் விளையாடும் தேவ்தத் படிக்கல் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 151 ரன்களை அடித்து மிரட்டினார். மேலும், போட்டி இன்று டிரா ஆன நிலையில், பிளேயர் ஆஃப் தி மேட்ச் விருது தேவ்தத் படிக்கலுக்கு வழங்கப்பட்டது. 

இந்த போட்டியில் அவர் தமிழ்நாட்டின் இடதுகை பந்துவீச்சாளர்களான சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகியோரை சிறப்பாக தாக்கி விளையாடினார். இடது கை வீரரான தேவ்தத் படிக்கல், இங்கிலாந்து அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சையும், வேகப்பந்துவீச்சையும் மிடில் ஆர்டரில் சமாளிக்கக் கூடிய வீரராக தேவ்தத் படிக்கல் பார்க்கப்படுகிறார். 

சென்னை டூ ராஜ்கோட்

சர்ஃபராஸ் கானின் (Sarfaraz Khan) இடம் உறுதியாகி உள்ள நிலையில், ரஜத் பட்டிதார் அல்லது தேவ்தத் படிக்கல் ஆகியோரில் ஒருவரை பிளேயிங் லெவனில் (IND vs ENG 3rd Test Playing XI) சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இன்று சென்னையில் ஆட்ட நாயகன் விருதை வென்ற கையோடு தேவ்தத் படிக்கல் ராஜ்கோட்டிற்கு செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.