ஜாபுவா: மத்திய பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரூ.7,550 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மத்திய பிரதேசத்தின் ஜாபுவா நகரில் அரசு நலத்திட்ட விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ரூ.7,550 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்து, புதியதிட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மத்திய பிரதேசத்தில் பழங்குடியின பெண்கள் சத்தான உணவு பெறுவதற்காக,அவர்களுக்கு மாதம்தோறும்ரூ.1,500 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 2 லட்சம் பழங்குடியின பெண்களுக்கான மாதாந்திர உதவி தொகையை பிரதமர் மோடி வழங்கினார். விழாவில் பிரதமர் பேசியதாவது:
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை ஜாபுவா நகரில் இருந்து நான் தொடங்குவதாக சிலர் கூறுகின்றனர். நான் பிரச்சாரம் தொடங்க வரவில்லை. மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 370 தொகுதிகளையும், பாஜக கூட்டணிக்கு 400 தொகுதிகளையும் வழங்க மக்கள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டனர். எனவே, மக்களுக்கு நன்றி தெரிவிக்கவே ஜாபுவா பகுதிக்கு வந்துள்ளேன்.
கடந்த ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸை மக்கள் புறக்கணித்தனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு ஏழைகள், விவசாயிகள், பழங்குடி மக்களின் நினைவு வரும்.மற்ற நேரங்களில் மக்களை அவர்கள் நினைப்பது இல்லை.
அதேநேரம், பழங்குடியின மக்களை வாக்கு வங்கியாக பாஜகபார்க்கவில்லை. இந்த நாட்டின் கவுரவமாக அவர்களை நாங்கள் கருதுகிறோம். பழங்குடியின மாணவ, மாணவிகளின் கனவுகளை நனவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.
நான் குஜராத் முதல்வராக இருந்தபோது, பழங்குடியின பகுதிகளில் வீடு வீடாக சென்று, பெண் குழந்தைகளை படிக்க வைத்தேன். பழங்குடியின மாணவ, மாணவிகளின் நலனுக்காக, ‘ஏகலைவா’ பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் பழங்குடியின மக்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் நலிவுற்ற, பின்தங்கிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதன் காரணமாக, ஏழைகள் வறுமையில் இருந்து மீண்டு, வாழ்க்கையில் முன்னேறி வருகின்றனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
ஜாபுவா பகுதி பழங்குடி மக்கள்போல, உடை, தலைப்பாகையை பிரதமர் அணிந்திருந்தார்.
குஜராத், ராஜஸ்தான் எல்லையில் மத்திய பிரதேசத்தின் ஜாபுவா பகுதி அமைந்துள்ளது. ஜாபுவாவை ஒட்டியுள்ள குஜராத்தின் 14 மாவட்டங்கள், ராஜஸ்தானின் 8 மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.