கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது – காங்கிரஸ்

டெல்லி,

அரபு நாடுகளில் ஒன்றான கத்தாரில் அல் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்களான நவ்தேஜ் சிங் பால், சவுரப் வலிந்த், பூந்ணேந்து திவாரி, பிரேந்திர குமார் வர்மா, சுகுணகர் பகவுலா, சஞ்சீவ் குப்தா, அமித்நாக் பால் மற்றும் ராகேஷ் ஆகிய 8 பேர் பணியாற்றி வந்தனர்.

இதனிடையே, கத்தாரில் நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசிய தகவல்களை உளவு பார்த்து இஸ்ரேலுக்கு கொடுத்ததாக இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரையும் அந்நாட்டு அரசு கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 8 பேருக்கு கடந்த ஆண்டு கத்தார் கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதையடுத்து, தூக்குதண்டனையை குறைக்குமாறு கத்தார் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. பேச்சுவார்த்தையின் பயனாக தூக்கு தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தையின் பயனாக கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்ய கத்தார் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, 18 மாதங்களுக்கு பிறக்கு 8 வீரர்களும் கத்தார் சிறையில் இருந்து தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலை செய்யப்பட்டவர்களில் 7 பேர் கத்தாரில் இருந்து இன்று காலை இந்தியா வந்தடைந்தனர். எஞ்சிய ஓருவரும் விரைவில் இந்தியா திரும்ப உள்ளார்.

இந்நிலையில், கத்தார் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், கத்தார் கோர்ட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியதில் ஒட்டுமொத்த நாட்டுடன் இணைந்து காங்கிரசும் மகிழ்ச்சியடைகிறது. விடுதலை செய்யப்பட்ட கடற்படை முன்னாள் வீரர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது’ என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.