Congress, Mani Shankar speech in support of Pakistan | பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்., மணி சங்கர் பேச்சு

புதுடில்லி, ”மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்,” என, மூத்த காங்., தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள அல்ஹம்ரா என்ற இடத்தில் நடந்த இந்தோ – – பாக்., விவகாரம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்., மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் பேசியதாவது:

பாகிஸ்தான் மக்கள் ஒரு விஷயத்தை நினைவில் வைத்திருக்க வேண்டும். தேர்தலில் மோடிக்கு மூன்றில் ஒரு பங்குக்கு மேல் ஓட்டுகள் கிடைத்ததில்லை.

ஆனால், இந்திய தேர்தல் நடைமுறைகளின் காரணமாக, மூன்றில் ஒரு பங்கு ஓட்டுகள் கிடைத்தாலும், மூன்றில் இரண்டு பங்கு சீட்டுகளை அவர் பெறுகிறார். எனவே, மூன்றில் இரண்டு பங்கு இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் பக்கம் வர தயாராக உள்ளனர்.

இந்தியாவின் மிகப் பெரிய சொத்தாக பாகிஸ்தான் உள்ளது. பாக்., மக்கள் மீது எனக்கு எப்போதுமே பிரியம் உண்டு. பாக்.,கில் நான் கண்ட விருந்தோம்பலை போல வேறு எந்த நாட்டிலும் கண்டதில்லை.

என் அனுபவத்தின்படி, பாக்., மக்கள் உணர்ச்சிவசப்பட கூடியவர்கள். நாம் அன்பை வெளிப்படுத்தினால் அதிக அன்பையும், விரோதத்தை வெளிப்படுத்தினால், அதிக விரோதத்தையும் வெளிக்காட்ட கூடியவர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மணி சங்கர் அய்யரின் இந்த பேச்சுக்கு, நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அவர், இதற்கு முன்பும் பலமுறை பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

மணி சங்கர் அய்யருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., பிரமுகர் உதய் பி.கருடாச்சார் கூறியதாவது:

பாகிஸ்தான் நல்ல விதமாக நடந்து கொள்ளும் வரை உலகம் முழுதும் அவர்களுடன் நன்றாகவே நடந்து கொள்வர். நீங்கள் மற்றவர்களை முட்டாளாக்க நினைத்தால், மற்றவர்களும் உங்களை முட்டாளாக்க நினைப்பர்.

மணி சங்கர் அய்யர் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. பாகிஸ்தான் எங்களுடன் நல்ல விதத்தில் நடந்து கொண்டால், இரு நாட்டு உறவு அமைதியுடனும், நல்லிணக்கத்துடனும் இருக்கும். அதை தான் நாங்களும் விரும்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.