புதுடெல்லி: இரண்டு நாள் பயணமாக இன்று ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்லவுள்ளார். அப்போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை அவர் திறந்துவைக்கவுள்ளார்.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு 13.5 ஏக்கர் நிலத்தை தானமாக கொடுத்தார். மேலும், கூடுதலாக 13.5 ஏக்கர் நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு வழங்கியது. இதையடுத்து சுவாமி நாராயண் கோயில் கட்டும் பணிக்கு அப்போது பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் கோயிலை பிரதமர் மோடி திறந்துவைக்கவுள்ளார்.
2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று செல்லும் பிரதமர் கோயிலைத் திறந்துவைக்கவுள்ளார். போச்சசன்வாசிஅக்சர் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா(பாப்ஸ்) அமைப்பு சார்பில் இந்த சுவாமிநாராயண் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயில் திறப்பு விழாபிப்ரவரி 14-ம் தேதி நடைபெறஉள்ளது. இதில் பிரதமர் மோடி உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
2 நாள் பயணத்தின் போது அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை, பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் அமீரகத்தின் துணை அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சரையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் பங்கேற்று அவர் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்திய நாட்டவர் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் இந்திய நாட்டு மக்கள் மிகப்பெரிய வெளிநாட்டவர் குழுவை உருவாக்கியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே வலுவான உறவை வளர்ப்பதில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.