அவரது ஈகோவுடன் விளையாடி அவரை வீழ்த்துங்கள் – இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் அறிவுரை

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியாவின் பேட்டிங் துறையில் யஷஸ்வி ஜெய்வால் அபாரமாக ஆடி வருகிறார். ஜெய்வால் இதுவரை 321 ரன்கள் குவித்துள்ளார். இதில் ஒரு அரைசதம், ஒரு இரட்டை சதம் அடங்கும்.

இந்நிலையில், தற்சமயத்தில் எளிதாக அவுட்டாகும் அளவுக்கு ஜெய்ஸ்வால் எந்த பலவீனத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும், அவருக்கு எதிராக ஆப் ஸ்பின்னரை வைத்து அடிக்கும் ஆசை காட்டி அவரது ஈகோவுடன் விளையாடுங்கள் என்று இங்கிலாந்து அணிக்கு முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் ஆலோசனை வழங்கி உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, சுப்மன் கில் 2-வது போட்டியில் தக்க நேரத்தில் அசத்தினார். அதே போல இந்திய பேட்ஸ்மேன்கள் பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான திறமையை கொண்டுள்ளனர். ஆனால் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் அடித்த வீரராக முன்னணியில் இருக்கும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் இங்கிலாந்துக்கு அதிக பிரச்சனையை கொடுத்துள்ளார்.

எனவே அவரை அவுட்டாக்குவதற்கு திட்டங்களை வகுக்க வேண்டும். அதிரடியாக விளையாடக்கூடிய திறமையை கொண்டுள்ள அவரிடம் பெரிய பலவீனம் இல்லை. எனவே நான் சற்று வித்தியாசமாக சிந்திக்க முயற்சி செய்வேன்.

குறிப்பாக அவருக்கு எதிராக புதிய பந்தில் லெக் ஸ்பின்னரை வைத்து பந்து வீசுவதை விட டீப் திசையில் ஒரு பீல்டரை நிறுத்தி ஆப் ஸ்பின்னரை வைத்து பந்து வீச வைப்பேன். அந்த வகையில் ஜெய்ஸ்வால் ஈகோவுடன் இங்கிலாந்து சற்று அதிகமாக விளையாடிப் பார்க்க வேண்டும் என நான் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.