சென்னை: “ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே சட்டமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்” என்று ஆளுநரின் சட்டப்பேரவை செயல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் உரை மீது இன்று பேசிய முதல்வர் ஸ்டாலின் பதிலுரையில் இடம்பெற்றுள்ள 10 முக்கிய அம்சங்கள்:
> “திராவிட மாடல் வழித்தடத்தில் நாம் இயங்கிக் கொண்டிருப்பதால்தான், தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை; தடுக்கவும் முடியாது. “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை மறைக்க முடியாது.
> ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, “தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது” என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழகத்துக்கு எதனால் சாத்தியமானது? திராவிட இயக்கத்தால்தான்.
> ஆளுநர் உரையுடன் 2024-2025ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரையாற்றுவது என்பது சட்டமன்ற மரபு. அரசின் கொள்கை அறிக்கையாக அமைச்சரவை தயாரித்துத் தருவதை அப்படியே இந்த மன்றத்தில் வாசிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. ஆனால், ஆளுநர் தனது அரசியல் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே சட்டமன்றத்தையும் பயன்படுத்திக் கொண்டாரோ என்று கருதும் வகையில் நடந்து கொண்டார்.
> ஆளுநரின் செயல், எங்களை அல்ல; நூற்றாண்டுப் பாரம்பரியம் கொண்ட தமிழ்நாடு சட்டமன்றத்தையே அவமானப்படுத்தும் செயல் அல்லவா? கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களை அலட்சியப்படுத்தும் காரியமல்லவா? மக்களாட்சி மாண்புக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அரசியல் சட்டத்தை மீறி, தான் ஏற்றுக்கொண்ட பதவிப்பிரமாணத்துக்கு மாறாக செயல்படுவது அல்லவா?
> எங்களைப் பொறுத்தவரை, இதுபோன்ற எத்தனையோ தடைகளை உடைத்து எழுந்து வந்தவர்கள். “தடைக்கற்கள் உண்டென்றால், அதை உடைக்கும் தடந்தோள்கள் உண்டு” என்பதை 75 ஆண்டுகளாக மெய்ப்பித்துக் காட்டி வரும் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவன் என்ற தகுதியோடு சொல்கிறேன்…” நான் ஸ்டாலின்! அதுவும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்!
> பாசிசத்தை, எதேச்சாதிகாரத்தை இந்தியாவில் நெஞ்சுயர்த்தி எதிர்கொண்டு இருக்கும் நாம், இதுபோன்ற சிறுபிள்ளை விளையாட்டுச் செயல்களைப் பார்த்து பயந்துவிட மாட்டோம். போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்; தொடர்ந்து செல்வேன்! எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்!” என்பதுதான் இவர்களுக்கு நான் சொல்லும் பதில்.
> திமுக ஆட்சியின் 33 மாத சாதனைகளுக்கு எல்லாம் மகுடம் சூட்டுவதுபோல் ஒரு சாதனை இருக்கிறது. அது தான் மிக மிக முக்கியமானது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் வளர்ந்து வருவதைப் பார்த்து நம் இன எதிரிகளுக்கு பொறாமையும் கோபமும் வருகிறது அல்லவா? அதுதான் திராவிட மாடல் ஆட்சியின் மாபெரும் சாதனை.
> ஆதிக்கக் குவியலை அகற்றுவதும், அடிமைப் பள்ளத்தை நிரப்புவதும் இவர்களது கோபத்துக்குக் காரணம். அந்தக் கோபத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் காட்டுகிறார்கள். அரசியல் சட்டப் பதவியில் இருக்கும் ஆளுநரும் அதற்கு விதிவிலக்கல்ல. அதற்காக நாம் அமைதியாக இருக்க முடியாது. நாட்காட்டியில் நகரும் ஒவ்வொரு நாளும், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
> 33 மாத சாதனைகள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையில் சாதிக்கப்பட்டவை. மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளை நான் அதிகம் விவரிக்கத் தேவையில்லை, விரும்பவுமில்லை. மாநில முதல்வர்களே டெல்லிக்கு வந்து போராட்டம் நடத்தும் அவலத்தைப் பார்க்கிறோம்.
> தமிழகம் இரண்டு பெரிய இயற்கை பேரிடர்களைச் சந்தித்தது. அதற்குக்கூட நிவாரணத் தொகை தரவில்லை.
> 30-06-2022 முதல் ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை நிறுத்தி விட்டார்கள். இதனால் தமிழகத்துக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்புத் திட்டங்களைத் தருவதில்லை. தமிழகத்துக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
> எதிர்க்கட்சித் தலைவர் மெட்ரோ ரயில் பணிகள் தொடர்பாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். மெட்ரோ ரயில் வேண்டாம் என்று கூறி, மோனோ ரயிலுக்குக் கொடி பிடித்தவர்கள் இன்று மெட்ரோ ரயிலுக்கு வந்திருப்பதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தாலும், அதனைச் செயல்படுத்துவதற்குத் அதிமுக ஆட்சியில் இருந்தவரை முனைப்புக் காட்டவில்லை.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுதான், பணி ஆணைகள் வழங்கப்பட்டன; ஒப்பந்தங்கள் அனைத்துப் மேற்கொள்ளப்பட்டன; அனைத்துப் பணிகளும் தொடங்கப்பட்டன. இதற்கான ஒன்றிய அரசின் நிதியை இதுவரை தராததால், இந்த முழுத் தொகையையும் மாநில அரசின் நிதியில் இருந்தும், மாநில அரசு வாங்கும் கடனிலிருந்து மட்டுமே இதுவரை செலவிடப்பட்டுள்ளது.
> இதுநாள் வரையில் பாஜகவோடு கூட்டணியில் இருந்தபோது பேசாமல் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இப்போதாவது பேசுகிறாரே என்ற அளவில் ஆறுதல் தருகிறது. இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை, எதிர்க்கட்சித் தலைவர் எங்களுடன் இணைந்து ஒன்றிய அரசிடம் நிதி பெற குரல் கொடுக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.