வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த ‛ புரோட்டான் ‘ இமெயில் சேவையை இந்தியாவில் முடக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை நந்தம்பாக்கம், அண்ணாநகர், கோபாலபுரம், பெரம்பூர் உள்ளிட்ட 13 பள்ளிகளுக்கு பிப்.,8 அன்று இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், பள்ளி நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர். குழந்தைகள், அவர்களின் பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர். சோதனையில், மிரட்டல் புரளி என தெரிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். மிரட்டல் இமெயில் முகவரியை ஆய்வு செய்த போது, சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புரோட்டான் நிறுவனத்தின் இமெயில் மூலம் மிரட்டல் அனுப்பப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்திடம் போலீசார் கேட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ‛புரோட்டான்’ இமெயில் சேவைக்கு இந்தியாவில் தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை போலீசின் கோரிக்கையை ஏற்று, இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என தெரிகிறது.
தடை விதிப்பது தொடர்பாக மத்திய அரசின் அறிக்கை வந்துள்ளதாக புரோட்டான் இமெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், சுவிஸ் சட்டப்படி, வெளிநாட்டு விசாரணை அமைப்புகளுக்கு தங்களால் நேரடியாக பதிலளிக்க முடியாது. தங்கள் நாட்டு அதிகாரிகள் தேவையான உதவிகளை அளிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement