புவனேஸ்வர், ஒடிசாவில் அமைக்கப்பட்டுள்ள, காலரா, மலேரியா உட்பட பல நோய்களை தடுக்கும், 15 வகையான தடுப்பூசிகளை தயாரிக்கும் பிரமாண்ட ஆலை, தன் தயாரிப்பை, வரும் மே மாதத்தில் துவங்க உள்ளது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள அந்தாருவாவில் மிகப் பெரிய உயிரிதொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுஉள்ளது.
இங்கு பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்து உள்ளன.
இந்த வளாகத்தில், ‘சாபிஜென் பயோலாஜிக்ஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில், பிரமாண்ட தடுப்பூசி ஆலை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு, மலேரியா, காலரா உட்பட பல நோய்களைத் தடுக்கும், 15 வகையான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட உள்ளன.
இங்கு நாளொன்றுக்கு, 2.4 கோடி டோஸ் தடுப்பூசிகள் தயாரிக்கும் வசதி உள்ளது.
இது தன் முழு திறனைப் பயன்படுத்தும்போது, நாட்டிலேயே மிகப் பெரிய தடுப்பூசி ஆலையாக அமையும்.
ஒடிசா முதல்வரின் செயலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வி.கே.பாண்டியன், மாநில அரசின், புதிய ஒடிசா திட்டத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
மாநில அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்பட்டுள்ள அவர், இந்த ஆலையில் நடந்து வரும் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, பல பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசனை செய்தார். அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும்படி, அரசு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார்.
இந்த ஆலையில், வரும், மே மாதத்தில் இருந்து தயாரிப்பு துவங்கும் என, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆலை, 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 1,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இங்கு தயாரிக்கப்படும் தடுப்பூசிகள், உலகெங்கும் வினியோகிக்கப்படும் என்றும் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ‘ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது’ என்ற லட்சியத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்