'பயணங்கள் முடிவதில்லை' – நினைவு கூர்ந்த எஸ்வி சேகர்

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசையமைப்பில் மோகன், பூர்ணிமா ஜெயராம், எஸ்வி சேகர், கவுண்டமனி மற்றும் பலர் நடித்து 1982ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளிவந்த படம் 'பயணங்கள் முடிவதில்லை'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 42 ஆண்டுகள் ஆகிறது.

இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட். மோகன், பூர்ணிமாவின் காதல் நடிப்பு, கவுண்டமணியின் கலக்கலான காமெடி என அந்தக் காலத்தில் ஆரவாரமான வெற்றியைப் பெற்று 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டது.

இப்படத்தின் மோகனின் நண்பராக எஸ்வி சேகர் நடித்திருந்தார். இப்படம் பற்றிய நினைவுப் பதிவொன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “நானும் மோகனும் பிலிம் சேம்பரில் படம் பார்த்துவிட்டு வந்து பேசும் போது நாலு வாரம் ஒடும் என பேசிக் கொண்டோம். எங்களின் கணிப்பை பொய்யாக்கி 25 வாரங்கள் ஒடிய படம். இன்றும் பேசப்படக்கூடிய ராஜாவின் பாடல்கள் ஒரு முக்கிய காரணம்.

ஆர் சுந்தர்ராஜனின் படைப்பு மிக அருமை. ரூ 15 ஆயிரத்தில், மீதியை தயாரிப்பாளர் கோவைத்தம்பி ரிலீசுக்கு முதல் நாள் கொடுத்தார். நான் காருக்குள் வந்து எண்ணியபோது ரூ1500 அதிகமாக இருந்தது. திரும்பச் சென்று அதை கொடுத்தேன். வாங்க மறுத்தவரிடம் பேசிய பணம் போதும் சார் என்று கொடுத்து விட்டேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் இது. முதல் படமே வெள்ளிவிழா படம் என்பதெல்லாம் அந்தக் காலத்தில் மிகப் பெரிய விஷயம். இளையராஜாவின் இசையில் வந்த பாடல்கள் இன்று வரை இந்தப் படத்தை ரசிகர்களின் நினைவில் நிறுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் காவியக் காதல் படங்களில் இந்தப் படத்திற்கும் ஒரு இடமுண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.