Motivation Story: ஏன், எதற்கு, எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும்? – தொழிலதிபர் எடுக்கும் பாடம்!

`நமக்கு வரும் ஆபத்தைத் தவிர்ப்பது நீண்டகாலத்துக்குப் பாதுகாப்பானது அல்ல. அதைவிட, அதை எதிர்கொண்டுவிடுவதே மேல்.’ – ஹெலன் கெல்லர்.

ஒரு சிறு குறிப்பு: சுப்ரதோ பாக்ச்சி (Subroto Bagchi) இந்தியாவின் முக்கியமான தொழிலதிபர். மைண்ட்-ட்ரீ’ (Mindtree) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர். ஒடிசா அரசின் தொழிற்சாலைகள் துறையில் சாதாரண கிளர்க்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். ஒரு வருட குமாஸ்தா வேலை சலித்துப்போக, அதை விட்டுவிட்டு, டி.சி.எம் (DCM) நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் ட்ரெயினியாகச் சேர்ந்து ஐந்து வருடங்கள் பயிற்சியெடுத்தார். பிறகு பல கம்ப்யூட்டர் நிறுவனங்களில், விற்பனை முதல் மார்க்கெட்டிங் வரை வெவ்வேறு துறைகளில் பணியாற்றி, கம்ப்யூட்டர் தொடர்பான ஞானத்தை வளர்த்துக்கொண்டார். இன்னும் விப்ரோ, லூசென்ட் டெக்னாலஜீஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு, 1999-ம் ஆண்டு, ஒன்பது பேருடன் சேர்ந்து மைண்ட்-ட்ரீ நிறுவனத்தை உருவாக்கினார். இன்றைக்கு சுமார் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றும் நிறுவனமாக மைண்ட்-ட்ரீ உயர்ந்து நிற்கிறது. சுப்ரதோ பாக்ச்சி, `கோ கிஸ் தி வேர்ல்ட்’ (Go Kiss The World) என்கிற சுயசரிதை உட்பட பல நூல்களை எழுதியிருக்கிறார். இன்றைய தொழில்முனைவோர் அனைவரும் படிக்கவேண்டிய முக்கியமான புத்தகங்கள் அவை. அவற்றில், `தி புரொஃபஷனல்’ (The Professional: Defining the New Standard of Excellence at Work) என்கிற நூல் விற்பனையில் சாதனை படைத்த, பல வாசகர்களின் கவனத்தை ஈர்த்த ஒன்று. அந்தப் புத்தகத்தில் ஒரு முக்கியமான சம்பவத்தைப் பகிர்ந்திருக்கிறார் சுப்ரதோ பாக்ச்சி.

எதிர்பாராத ஆபத்து ஏற்படும் சூழ்நிலையில் ஒருவர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்கிற பாடத்தை விவரிக்கும் சம்பவம் அது. மைண்ட்-ட்ரீ நிறுவனத்தில் ஆண்டுதோறும் ஒரு மீட்டிங் நடக்கும். சுப்ரதோ பாக்ச்சி, அவருக்குக்கீழ் பணியாற்றும் முக்கிய நிர்வாகிகளை அழைத்து ஒரு மீட்டிங் போடுவார். எதிர்வரும் ஆண்டில் சாதிக்கவேண்டிய இலக்குகள் குறித்துத் துறைவாரியாகப் பேசுவார். இலக்கை அடைய ஒவ்வொருவரின் பங்கு, அடுத்தவர்களின் பங்கு குறித்தெல்லாம் விவாதம் நடத்தி ஒரு முடிவுக்கு வருவார்கள். அந்த ஆண்டு அந்தக் கூட்டத்தை பெங்களூரில் நடத்தாமல், வெளியே வேறு எங்காவது நடத்தலாம் என விரும்பினார் பாக்ச்சி.

Subroto Bagchi’s Book

கேப்டன் ரவி என்பவர் முன்னாள் ராணுவ வீரர். பாக்ச்சியின் நண்பர். இது போன்ற கூட்டங்கள், பயிற்சி முகாம்கள் ஆகியவற்றை நடத்துவதற்காகவே `தி பெகாசஸ் கேம்ப்’ என்ற மையத்தை நடத்திவந்தார். அந்த இடம் கூட்டம் நடத்தப் பொருத்தமானதாக இருக்கும் என்று நினைத்தார் பாக்ச்சி. கூடவே தன் பணியாளர்கள் எதிர்பாராத தருணங்களில் என்ன முடிவெடுக்கிறார்கள், எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் நினைத்தார். அதற்காகத் தன் நண்பர் கேப்டன் ரவியின் உதவியுடன் ஒரு திட்டத்தையும் வகுத்தார். நிர்வாகிகள் அனைவரும் ஒரு சிறிய பேருந்தில் செல்வதற்கு ஏற்பாடானது. அதிகாரிகள் அனைவரும் குறித்த நேரத்தில் பேருந்து கிளம்பும் இடத்துக்கு வந்துவிட்டார்கள். ஆனால், சுப்ரதோ பாக்ச்சி வரவில்லை.

`ரிஸ்க் எடுக்கவில்லையென்றால், உங்களால் வெற்றியை அடைய முடியாது. நான் ரிஸ்க் எடுக்க பயந்ததே இல்லை.’ – பிரேசிலைச் சேர்ந்த சண்டைக் கலைஞர் மார்லன் மொரேஸ் (Marlon Moraes).

“சுப்ரதோ பாக்ச்சி சார் எங்கே?’’ என்று டிரைவரிடம் கேட்டார் ஒரு நிர்வாகி.

“அவர் முன்னாடியே கார்ல போயிட்டார் சார்’’ என்ற டிரைவர், அவர்களை ஏற்றிக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்.

ஒன்றரை மணி நேரப் பயணத்தில், அந்தச் சிறு பேருந்து மெயின் ரோட்டை விட்டு விலகி, கரடுமுரடான சாலையில் செல்ல ஆரம்பித்தது. மேடும் பள்ளமுமாக இருந்தது அந்தச் சின்னஞ்சிறு சாலை. அலுங்காமல் குலுங்காமல் வாகனம் செல்வதற்கான வசதி சிறிதும் இல்லாத சாலை. கேப்டன் ரவிக்குச் சொந்தமான முகாம், ஒரு மலையடிவாரத்தில் ஏரியை ஒட்டினாற்போல் அமைந்திருந்தது. அந்தப் பேருந்து ஒரு கிராமத்தை நெருங்கியபோது, அதிலிருந்த நிர்வாகிகளில் பெரும்பாலானோர் களைத்துப்போய் உறக்கத்திலிருந்தார்கள். திடீரென பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தை மறித்துக்கொண்டு அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் கண்களில் கோபம் தெரிந்தது.

Subroto Bagchi |சுப்ரதோ பாக்ச்சி

பேருந்திலிருந்த நிர்வாகிகள் மெல்ல விழித்துக்கொண்டார்கள். வெளியே ஏதோ களேபரம் நடந்துகொண்டிருக்கிறது என்பது அவர்களுக்குப் புரிந்தது. கிராமத்து மனிதர்கள் சத்தமெழுப்பியதிலிருந்து, இந்தப் பேருந்துக்கு முன்னால் அந்த கிராமத்தைக் கடந்து சென்ற கார் ஒரு ஆட்டை ஏற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது என்பது புரிந்தது. அந்த கார் சுப்ரதோ பாக்ச்சி சென்ற காராகத்தான் இருக்கும் என்பதும் அவர்களுக்குப் புரிந்தது. அதற்குள் அந்த மனிதர்கள் பேருந்தைச் சுற்றிவளைத்து நின்றுகொண்டார்கள். அவர்களின் கைகளில் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்கள் பேருந்தில் இருந்தவர்களை இறங்கச் சொல்லிச் சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஆட்டின் மீது காரை ஏற்றிய நபர் உடனே இங்கே வந்தாக வேண்டும் என்றும், ஆட்டுக்கு உரிய விலையைத் தந்தாக வேண்டும் என்றும் அவர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருந்தார்கள்.

இப்போது பஸ்ஸிலிருந்த நிர்வாகிகள் திகைத்துப்போனார்கள். அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நிமிடத்துக்கு நிமிடம் கிராமத்தினரின் கோபம் அதிகமாகிக்கொண்டே போவதுபோல் தோன்றியது. “யாருய்யா பஸ்ஸுல… இறங்குய்யா’’ என்று ஓர் ஆள் அதட்டினார். இந்தக் காட்சிகளையெல்லாம் சற்று தூரத்திலிருந்த கிராமத்துப் பள்ளியிலிருந்த சிறு ஜன்னல் வழியாக சுப்ரதோ பாக்ச்சி பார்த்துக்கொண்டிருந்தார்.

`நான் வாழ்க்கையில் நிறைய ரிஸ்க் எடுத்திருக்கிறேன். மேலும், வாழ்க்கை என்பதே ரிஸ்க் எடுப்பதுதான் என்று நான் நம்புகிறேன்.’ – நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா (Ayushmann Khurrana)

அந்தப் பேருந்தில் மிகவும் தகுதிவாய்ந்த, திறமைசாலிகளான மூத்த நிர்வாகிகள் இருந்தார்கள். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சிக்கலான தருணங்களை எப்படிக் கையாள வேண்டும் என்கிற பயிற்சி பெற்றவர்கள் அவர்கள். இன்ஜினீயரிங், எம்.பி.ஏ போன்ற பெரும் படிப்புகளைப் படித்திருப்பவர்கள். ஆனால் இன்றைக்கு, இங்கோ நிலைமையே வேறு. கிராமத்து மனிதர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. கையில் ஆயுதங்களுடன் கோபமாகச் சத்தம் வேறு போட்டுக்கொண்டிருந்தார்கள். சுப்ரதோ பாக்ச்சி அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள், யார் இந்தச் சூழ்நிலைக்குப் பொறுப்பேற்கப் போகிறார்கள் என்று பள்ளிக்கூடத்தின் சிறு ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டிருந்தார்.

Subroto Bagchi’s Book

சிறிது நேரம் கழித்து, வண்டிக்குள் இருந்த சிலர் உள்ளே இருந்தவாறே சமாதானம் பேச முயன்றார்கள். அவை தனித்தனிக் குரல்களாக ஒலித்தன. ஒரு தலைமையிடமிருந்து வரும் ஒருமித்த குரலாக அது இல்லை. அதனால் ஒரு பயனும் ஏற்படவில்லை. பேருந்துக்குள் இருந்தவர்கள் எல்லோரும் கலவரத்துடன் இருந்தார்கள். கிராமத்தைச் சேர்ந்தவர்களோ எல்லோரையும் பேருந்திலிருந்து இறக்காமல் விடுவதில்லை என்கிற முடிவோடு இருப்பதுபோலத் தோன்றியது.

இந்தக் குழப்பத்துக்கு நடுவே நாகன், ஸ்ரீபாத் என்ற இரண்டு பேர் எழுந்தார்கள். பேருந்தின் கதவைத் திறந்து கீழே இறங்கினார்கள். அந்த இருவரும் அங்கு இருப்பவர்களிலேயே பதவியிலும், நிர்வாக அனுபவத்திலும் இளையவர்கள். நிர்வாக விஷயத்தை எடுத்துச் சொல்வதிலும் யாரையும் பெரிதாக அவர்கள் கவர்ந்ததில்லை. அவர்கள் பேருந்துக்கும் கிராமத்தினருக்கும் நடுவே நின்றுகொண்டு கூச்சல் போட்டவர்களை மெல்ல சமாதானப்படுத்த முயன்றார்கள். தங்கள் சக ஊழியர்களுக்காகப் பரிந்து பேசினார்கள். அதைப் பார்த்த சுப்ரதோ பாக்‌ச்சி பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்தார். கயிற்றில் கட்டப்பட்டிருந்த ஆடு ஒன்றைக் கூட்டிக்கொண்டு அவர் வந்தார். அவர் வரும்போது கூட்டம் அமைதியாகி, அவருக்கு வழிவிட்டு விலகி நின்றது. அப்போதுதான் அங்கே அதுவரை நடந்ததெல்லாம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நாடகம் என்பது பேருந்தில் இருந்தவர்களுக்குப் புரிந்தது.

Subroto Bagchi |சுப்ரதோ பாக்ச்சி

இந்த நிகழ்வு நடந்து பல வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பேருந்தில் வந்த `நட்சத்திரங்கள்’ என்று கருதப்பட்ட பல நிர்வாகிகள் ஒளி குன்றிப்போனார்கள். சிலர் வேறு எங்கெங்கோ போய்விட்டார்கள். அன்று பேருந்திலிருந்து இறங்கிய நாகனும் ஸ்ரீபாத்தும் மட்டும் இன்னும் மைண்ட்-ட்ரீ நிறுவனத்தில் தொடர்ந்து பொறுப்பு வகித்துவருகிறார்கள். இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கும் `The Professional’ புத்தகம் `தொழில் வல்லுநர்’ என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நிகழ்வு குறித்து சுப்ரதோ பாக்ச்சி இப்படிக் குறிப்பிடுகிறார்… `ஆபத்து உண்டாகலாம் என்னும் சூழ்நிலையில், பலரும் உறைந்துபோய் நின்றுவிடுகிறார்கள். எதிர்த்து நிற்கும் கூட்டத்துக்கு இடையே நுழையவிடாமல் அச்சம் அவர்களைத் தடுக்கிறது. `அதிகாரம் என்பது தரப்படுவதல்ல. எடுத்துக்கொள்ளப்படுவது’ என்று கேட்டிருக்கிறோம். இதில் முன்பாதியிலாவது ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். ஆனால், பின்பாதி நிச்சயமாக உண்மையல்ல. உண்மையான வலு அல்லது அதிகாரம் என்பது, எத்தகைய இடர்கள் வந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் துணிவை, தன்னம்பிக்கையை, அவற்றின் மூலம் பொறுப்பேற்றுக்கொள்வதற்கான தகுதியை வளர்த்துக்கொள்வது.’

ஆக, ரிஸ்க் எடுக்கவேண்டிய நேரத்தில் ரிஸ்க் எடுத்துத்தான் ஆக வேண்டும் பாஸ்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.