பெங்களூரு : மகளிர் தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில், கர்நாடக அரசு, ‘குழந்தை வீடு’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
கர்நாடக பெண்களுக்கு, ‘சக்தி, கிரஹ லட்சுமி’ திட்டங்களை அரசு செயல்படுத்தியது. சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் மாநிலம் முழுதும், இலவசமாக பயணம் செய்கின்றனர். கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை பெறுகின்றனர்.
தற்போது கட்டுமான பெண் தொழிலாளர்கள், நரேகா திட்டத்தின் கீழ் பணியாற்றும் பெண் தொழிலாளர்களின் வசதிக்காக, ‘குழந்தை வீடு’ திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. கூலி வேலைக்கு வரும் சில பெண்கள், சிறு குழந்தைகளுடன் வருகின்றனர். குழந்தைகளை பார்த்துக்கொள்ள, வீட்டில் யாரும் இல்லாததால், பணியிடத்துக்கு அழைத்து வருகின்றனர்.
குழந்தைகளை பார்த்துக் கொண்டு, பணியிலும் ஈடுபட்டு சிரமப்படுகின்றனர். பணியில் முழுதாக ஈடுபாடு காண்பிக்க முடிவதில்லை. இவர்களின் வசதிக்காக, ‘குழந்தை வீடு’ திட்டத்தை அரசு செயல்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக நரேகா பெண் தொழிலாளர்களுக்கு, மாநிலத்தில் பல்வேறு இடங்களில் 3,787 குழந்தை வீடுகள் திறக்கப்பட்டுள்ளன.
பெண் தொழிலாளர்கள், தங்கள் குழந்தையை இங்கு விட்டு விட்டு, பணிக்குச் செல்லலாம். இங்குள்ள ஊழியர்கள், குழந்தைகளை பராமரிப்பர். குழந்தைகளுக்கு தேவையான உணவும் வழங்கப்படும்.
இதுதொடர்பாக, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், முதல்வர் சித்தராமையா நேற்று கூறியிருப்பதாவது:
உழைக்கும் கைகளுக்கு, வேலை கிடைக்கிறது. நரேகா மகளிர் தொழிலாளர்களின் குழந்தைகளை பராமரிக்க, மாநிலம் முழுதும், 3,787 ‘குழந்தை வீடு’கள் துவக்கப்பட்டன.
பெண்கள் யாரையும் சார்ந்திராமல், வாழ்க்கை நடத்த போராடுகின்றனர். இவர்களுக்கு எங்கள் அரசு முதுகெலும்பாக நின்றுள்ளது.
இதில், 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சலுகை கிடைக்கும். கூலி வேலை செய்யும் பெண்கள், தங்களின் சிறு குழந்தையை, இந்த குழந்தை வீட்டில் செல்லலாம். பணி முடிந்த பின், அழைத்துச் செல்லலாம். ஏழை பெண்களுக்கு இது உதவியாக இருக்கும்.
குழந்தையை பற்றிய சிந்தனையை விட்டுவிட்டு, பணியில் கவனத்தை செலுத்தலாம். குழந்தைகளை அரசே பார்த்துக் கொள்ளும். எனவே பெண் தொழிலாளிகள் கவலையின்றி பணியாற்றலாம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்