
சென்னை: "பாஜகவும் அதன் ஆதரவு சக்திகளும் தேர்தல் முறையை சீரழித்து, முறைகேடான முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முயற்சிக்கின்றன என்பதைத்தான் தேர்தல் ஆணையத்தில் நடக்கும் இந்த நாடகக் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே, உச்ச நீதிமன்றம் இதனை வேடிக்கை பார்க்க கூடாது" என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அருண் கோயல் பதவி விலகியிருப்பது நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடக்குமா என்கிற அச்சத்தை எழுப்பி இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்றம் இதில் உடனடியாகத் தலையிட்டுத் தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளமாக இருப்பது தேர்தல் முறையாகும். சுமார் 140 கோடி மக்களின் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நேர்மையான முறையில் நடத்தப்பட வேண்டும்.