குரிகா, மார்ச் 11-
நைஜீரியாவில், 300 பள்ளி மாணவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில், அவர்களை தேடும் பணியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், ஐ.எஸ்., அல் – குவைதா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
தாக்குதல்
கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், இங்கு கடூனா மாகாணத்தில் உள்ள குரிகா நகரில் பள்ளி ஒன்றில் புகுந்த கும்பல், அங்கிருந்த மாணவர்களை கடத்தி சென்றது.
இரு சக்கர வாகனங்களில் வந்த ஆயுதமேந்திய கும்பல், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. பின், அங்கிருந்த ஆசிரியர்கள், ஊழியர்களை மிரட்டி, 7 முதல் 18 வரையிலான 70க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்திச் சென்றது.
இந்த சம்பவத்தின் போது, ஆசிரியர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
மக்கள் அச்சம்
அண்டை மாகாணங்களான சோகோடோ, போர்னோ ஆகியவற்றில் இருந்து, இரண்டு நாட்களுக்கு முன், 220 மாணவர்கள் கடத்தப்பட்டனர். ஒரே வாரத்தில் மூன்று பள்ளிகளில் இருந்து 300 மாணவர்கள் கடத்தப்பட்டது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கடத்தல் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. மாணவர்களை மீட்கும் முயற்சியில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்