சென்னை: இரட்டை இலை சின்னம் விவகாரத்தில், கட்சிக்கு தொடர்பு இல்லாதவர் தாக்கல் செய்துள்ள மனுவை நிராகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் எஸ்.சூரியமூர்த்தி. அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இருந்தவர். கடந்த 2017-ம்ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது, அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது, பின்னர் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் இவர் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டுஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி ஒரு மனு அளித்திருந்தார். தான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்குகள் நிலுவையில் உள்ள சூழலில், பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கூடாது என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
ஆணையத்தில் மீண்டும் மனு: அதேபோல, வரும் மக்களவை தேர்தலிலும் பழனிசாமிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்ககூடாது என்று தேர்தல் ஆணையத்தில் சூரியமூர்த்தி கடந்த பிப்ரவரி 12-ம் தேதி மீண்டும் மனு அளித்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு மின்னஞ்சல் வழியாக அதிமுக பதில் மனு அனுப்பியுள்ளது.
‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று,பழனிசாமியை பொதுச் செயலாளராக அங்கீகரித்து இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
விதிகளின்படி, சின்னத்தை கோருவதற்கு கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்கும் ஒருவருக்கு உரிமை உள்ளது. தவிர, சின்னத்தை தனக்கு ஒதுக்குமாறு ஒருவர் கேட்கலாமே தவிர, வேறொருவருக்கு ஒதுக்க கூடாது என்று கூற உரிமை இல்லை.
அதுவும், சூரியமூர்த்தி அதிமுகவுக்கு தொடர்பு இல்லாதவர். எனவே, அவரது மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்’’ என்று அதிமுக தாக்கல்செய்துள்ள பதில் மனுவில்கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.