புதுடெல்லி: மாநிலங்களவை உறுப்பினராக பிரபல நன்கொடையாளரும் எழுத்தாளருமான சுதா மூர்த்தி இன்று பதவியேற்றுக்கொண்டார்.
பிரபல நன்கொடையாளரும், எழுத்தாளரும், இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தியை, மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சமீபத்தில் நியமித்தார். இதையடுத்து, சுதா மூர்த்தி நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நாராயணமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
மாநிலங்களவை உறுப்பினராக சுதா மூர்த்தி நியமிக்கப்பட்டதை அடுத்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், சுதா மூர்த்தியை மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் நியமித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக சேவை, நன்கொடை அளிப்பது, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகப் பெரிய பங்களிப்பையும் பலருக்கும் ஊக்கத்தையும் அளித்து வருபவர் சுதா மூர்த்தி. அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது பெண் சக்திக்கு ஒரு உதாரணம். இதன்மூலம், நாட்டின் விதியை மாற்றி அமைப்பதில் பெண்களின் திறன் மேலும் பிரகாசிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுதா மூர்த்தி, “நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அதேநேரத்தில், எனக்கு மிகப் பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருப்பதாக உணர்கிறேன். என்னால் என்ன முடியுமோ அதை நிச்சயம் செய்வேன். ஏழைகளின் நலனுக்காக மிகப் பெரிய தளத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தில் மிகழ்ச்சி.
அரசியலில் நுழைவதற்கான முதற்படியா இது என கேட்கிறீர்கள். நான் என்னை அரசியல்வாதியாக கருதுவதில்லை. ஏனெனில், நான் அரசியல்வாதி அல்ல. நான் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். எனது மருமகனின் (இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின்) அரசியல் அவரது நாட்டுக்கானது. அது வேறு. எனது பணி வேறு. தற்போது நான் அரசு பணியாளர்” என தெரிவித்தார்.
2006ல் பத்ம ஸ்ரீ விருதினையும், 2023ல் பத்மபூஷன் விருதினையும் பெற்ற சுதா மூர்த்தி, ஆங்கிலம் மற்றும் கன்னட இலக்கியங்களுக்கு மிகப் பெரிய பங்களிப்பை அளித்திருப்பவர். இன்போசிஸ் ஃபவுண்டேஷனின் தலைவராக இருந்த சுதா மூர்த்தி, கடந்த 2021ல் அதில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.