பெங்களூரு : பெங்களூரு தனியார் பள்ளி முன், டிராக்டரில் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்புக்கு பின், தற்போது வெடி பொருட்கள் கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரு மாரத்தஹள்ளி அடுத்த புரூக்பீல்டில் உள்ள பிரபல, ‘ராமேஸ்வரம் கபே’ உணவகத்தில், இம்மாதம் 1ம் தேதி, இரண்டு முறை குண்டு வெடித்தது. அன்றைய தினம், பையுடன் உணவகத்துக்கு வந்த ஒரு மர்ம நபர், குண்டு வெடிக்க செய்தது உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கை, என்.ஐ.ஏ., மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். முக்கிய குற்றவாளி இதுவரை கைது செய்யப்படவில்லை. அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில், நகரின் பெல்லந்துார் சிக்கநாயகனஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளி எதிரில், நேற்று ஒரு டிராக்டர் நின்று கொண்டிருந்தது.
ரோந்து பணியில் இருந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில், டிராக்டரில் என்ன உள்ளது என்று, அங்கிருந்த தொழிலாளர்களிடம் விசாரித்த போது, சரியாக பதில் சொல்லவில்லை.
உடனடியாக, அதில் போலீசார் சோதனை நடத்தினர். அதில், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உட்பட வெடி பொருட்கள் இருந்தன. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வந்து, பரிசோதனை செய்து அவற்றை பறிமுதல் செய்தனர். கட்டடம் கட்ட, பாறைகள் உடைக்க இந்த வெடி பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
ஆனால், வெடி பொருட்கள் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளனரா அல்லது வேறு சதி வேலை இருக்கிறதா என்பது உட்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடக்கிறது. பள்ளி முன்பு வெடி பொருட்கள் இருந்த சம்பவம், அப்பகுதியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பெல்லந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்