சென்னை, பிடாரியார் கோவில் தெரு, இரண்டாவது பாதையைச் சேர்ந்தவர் இருதயராஜ் (63). இவரின் மனைவி இசபெல்லா. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இருதயராஜ், வண்ணாரப்பேட்டையில் இரும்பு பிளேட் கடை நடத்தி வந்தார். வங்கி ஒன்றில் 7 லட்சம் ரூபாயை இருதயராஜ் கடனாக வாங்கியிருந்தார். அதற்கு மாதம் 16,000 ரூபாய் செலுத்தி வந்தார். கடந்த ஆறு மாதங்களாக இருதயராஜ் பணம் செலுத்தவில்லை. அதனால் வங்கியிலிருந்து பணத்தை செலுத்தும்படி நெருக்கடி கொடுத்திருக்கிறார்கள்.

அதனால் மன வேதனையடைந்த இருதயராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக முத்தியால்பேட்டை போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று இருதயராஜின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருதயராஜ் தற்கொலை செய்து கொண்ட அறையில் கடிதம் ஒன்று கிடைத்தது.

அதில், `என் தற்கொலைக்கு சம்பந்தப்பட்ட வங்கிதான் காரணம். நான் லோன் வாங்கி சரியாக பணம் செலுத்தி வந்தேன். வியாபாரம் சரியில்லாத காரணத்தால் 6 மாதம் பணம் செலுத்தவில்லை. சேர்த்து கட்டி விடுகிறேன் என்று கூறியும் நம்பவில்லை. என் குழந்தைகளை வைத்து என்னை மிரட்டினார்கள். என் மகன்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்ற மனவேதனையில் இருக்கிறேன். இந்தச் சமயத்தில் வங்கியிலிருந்து எனக்கு டார்ச்சர் கொடுத்தார்கள். இந்த லோனுக்கும் என் மகன்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனக்கும் சந்தோஷம் இல்லை. என் பிள்ளைகளுக்கும் எந்த சந்தோஷமும் செய்யாமல் வேதனையுடன் செல்கிறேன். அப்பாவை மன்னித்துவிடுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதம் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.