சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது நாட்டிற்கு கிடைத்த வெற்றி…
நேற்று முன் தினம் (2024.03.22) அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திரசிகிச்சை பிரிவு வளாகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
நிர்மாணப் பணிகள் நிறைவடைந்ததும், ஆறு மாடிகளைக் கொண்ட இந்த புதிய சத்திர சிகிச்சை பிரிவு வளாகத்தில் 600 படுக்கைகள் மற்றும் 8 நவீன சத்திர சிகிச்சை கூடங்கள் இருக்கும். கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு நேரடியாக சுகாதார சேவைகளை வழங்கும் அவிசாவளை வைத்தியசாலை, ஆற்றின் இரண்டு பக்கங்களிலும் உள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்ட மக்களுக்கும் உயர்தர சுகாதார சேவைகளை வழங்குகிறது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்-
இந்த புதிய மருத்துவமனை வளாகத்தின் நிர்மாணப் பணிகளானது நோய்களைத் தடுப்பதற்கும் நிவாரணமளிப்பதற்கும் ஒரு சிறந்த நடவடிக்கையாகவும், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரு பங்களிப்பாகவும் உள்ளது.
அண்மையில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்க கிடைத்தது. இலங்கை தற்போது ஒரு குறிப்பிட்ட நிலையான வளர்ச்சிப் பாதையை எட்டியுள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அதன்படி, அடுத்தகட்ட நிதியுதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து விடுவிக்க இணங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் நாம் சிறப்பாக செயற்பட்டமை குறித்து அறிவிக்கப்படும். சிரமங்கள் எங்களுக்குத் தான் இருக்கிறது. அந்த சிரமங்களின் காரணமாக, நாம் சிறப்பாக செயற்பட்டிருக்கின்றோம். எங்கள் விவகாரங்களை மிகவும் நன்றாக முகாமைத்துவம் செய்திருக்கின்றோம். எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இலங்கை தகுதி பெற்றிருப்பது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகும். நாங்கள் திறக்கும் பரிவர்த்தனை பத்திரங்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அது மிகவும் கடினமான சூழ்நிலை. முதலில் அதிலிருந்து வெளிவருவதற்கான நம்பிக்கையை நாம் உருவாக்கினோம். அதன் பிறகு, ஒரு முறையான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் ஏனைய பிரதேசங்களில் உள்ள சிறிய வைத்தியசாலைகளும் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். மருத்துவமனை சுகாதார அமைச்சுக்கு சொந்தமானது என்று அலட்சியமாக இருந்துவிடாது, மருத்துவமனையின் முழுமையான தூய்மைக்கு மாநகர சபை ஆதரவு வழங்க வேண்டும்.
சீதாவக்கை நகர மையத்தை மேம்படுத்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன் பணி மிக விரைவில் ஆரம்பிக்கப்படும். சீதாவக்கை நகரை எமது நாட்டின் மற்றுமொரு மத்திய நகரமாக முன்னேற்றுவதற்கான பயணத்தில் அதுவும் பலமாக அமையக் கூடும். அந்த வாய்ப்புகளில் அரச திணைக்களங்கள் மட்டுமின்றி தனியார் துறையினரும் பங்கேற்கலாம்.
இன்று தகவல் தொழில்நுட்பம் முன்பை விட முன்னேற்றம் அடைந்துள்ளது. உலகின் ஏனைய நாடுகளில் தகவல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி ஒவ்வொரு துறையும் வளர்ச்சி அடைந்து வருகிறது. மருத்துவம் மற்றும் சத்திர சிகிச்சை துறை தகவல் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
படிப்படியாக நிறைவடையும் கட்டத்தை அடைந்துள்ள அவிசாவளை வைத்தியசாலையானது எமது மாகாணத்திற்கும், எமது மாவட்டத்திற்கும், இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கும், சில சமயங்களில் ஆற்றின் அக்கறையில் இருந்து வரும் கம்பஹா மாவட்ட மக்களுக்கும் உயர்தர சுகாதார சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு மற்றுமொரு வெற்றியாக அமையும்.
மேல்மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, கொழும்பு மாவட்ட செயலாளர் கே. ஜி. விஜேசிறி, அவிசாவளை மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் ஒசந்த வெல்லால உட்பட வைத்தியசாலை மற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.