பிளாஷ்பேக் : 60 ஆண்டு, 2500 படங்கள் : யாராலும் முறியடிக்க முடியாத சாதனை படைத்த சுகுமாரி

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர் சுகுமாரி. எந்த வேடம் என்றாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுகிற தன்மை இருவருக்கு வாய்த்தது. ஒருவர் மனோரமா, இன்னொருவர் சுகுமாரி. அதனால்தான் சுகுமாரியை மலையாள மனோரமா என்று செல்லமாக அழைப்பர்கள்.

காலையில் ஒரு முண்டு(வேட்டி)வும் ஒரு பிளவுசையும் அணிந்து காரில் ஏறினால் மாலைக்குள் அதே உடையில் நான்கு படத்தில் நடித்து விட்டு திரும்புவார் என்று சுகுமாரி பற்றி அப்போதே கூறுவார்கள். ஒரே ஆண்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.

நாகர்கோவிலில் பிறந்து சென்னையில் வளர்ந்த மலையாளி சுகுமாரி. லலிதா, பத்மினி, ராகினி சகோதரிகளின் உறவினர். பத்மினி சகோதரிகள் அழகாக இருப்பதால் அவர்கள் சினிமாவில் ஜெயித்தார்கள் அந்த குடும்பத்தில் பிறந்தாலும் உனக்கு அழகில்லை உன்னால் சினிமாவில் ஜெயிக்க முடியாது என்று உறவினர்கள் புறந்தள்ளிய நிலையில் சினிமாவில் 60 ஆண்டுகள் பயணித்து 2500 படங்களில் நடித்து முடித்தவர் சுகுமாரி.

நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சுகுமாரி 1951ம் அண்டு 'ஓர் இரவு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு அவர் தன் வாழ்நாள் முழுவதும் நடித்துக் கொண்டே இருந்தார். இயக்குனர் பீம்சிங்கை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சில காலம் ஒதுங்கிய அவர், பீம்சிங் கேட்டுக் கொண்டதாலேயே மீண்டும் நடித்தார். 2500 படங்களில் உலக சினிமா வரலாற்றில் எவரும் நடித்தில்லை. இனி சுகுமாரியின் சாதனைய எவராலும் முறியடிக்கவும் முடியாது.

இந்த மாபெரும் கலைஞரை தீ பலிவாங்கியதுதான் காலத்தின் சோகம். வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் ஏற்பட்ட சிறிய தீ விபத்தில் பாதிக்கபட்ட சுகுமாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே முதுமை காரமாக உடல்நலப் பிரச்னையில் இருந்த அவர் இயற்கையை வெல்ல முடியாமல் 2013ம் ஆண்டு இதே நாளில்(மார்ச் 26) காலமானார். அவரது 11வது நினைவு நாள் இன்று.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.