தமிழகத்தில் சொந்த ஊர்களுக்குச் சென்று மக்கள் வாக்களித்திட 10,124 பேருந்துகள் இயக்கம்

சென்னை: 2024 மக்களவைத் தேர்தலையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்திட வசதியாக 10,124 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2024 மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் 19-ம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு, போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டமானது, போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பணீந்திரரெட்டி தலைமையில் திங்கள்கிழமை (ஏப்.8) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை இணை ஆணையர், காவல்துறை உயர் அலுவலர்கள், அரசுத் துறை அலுவவலர்கள் மற்றும் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொண்டனர்.

2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் ஏப்.17 மற்றும் ஏப்.18 ஆகிய தேதிகளில், சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 2,970 சிறப்புப் பேருந்துகள் என இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 7,154 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட இரண்டு நாட்களுக்கு 3,060 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 10,124 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு, வரும் ஏப்.20 மற்றும் ஏப்.21 ஆகிய தேதிகளில் தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன், 1,825 சிறப்பு பேருந்துகள், இரண்டு நாட்களும் சேர்த்து மொத்தமாக 6,009 பேருந்துகள், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 2,295 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 8,304 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.