ரோகித் சர்மா சிக்னலுக்காக காத்திருக்கும் 3 அணிகள்! ஹிட்மேனுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் வெயிட்டிங்

ரோகித் சர்மா அதிருப்தி

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டதில் ரோகித் சர்மா கடும் அதிருப்தியில் இருக்கிறார். ஐபிஎல் ஏலம் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருப்பார் என கூறிவிட்டு, ஐபிஎல் ஏலத்துக்கு முன்பாக வீரர்களுக்கான வர்த்தகம் நிறைவடைந்த தேதிக்குப் பிறகு ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது மும்பை இந்தியன்ஸ். அத்துடன் குஜராத் அணிக்கு சென்ற ஹர்திக் பாண்டியாவை திறைமறைவு பேரம் மூலம் அழைத்து வந்து அவரை கேப்டனாக நியமித்தது அந்த அணி. இதனால் ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார். 

அபிஷேக் நாயருடன் உரையாடல்

இது குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடான போட்டிக்கு முன்பாக அபிஷேக் நாயருடன் மைதானத்தில் வெளிப்படையாக பேசினார் ரோகித் சர்மா. அந்த உரையாடலில், ” நான் மும்பை இந்தியன்ஸ் அணியை கோவிலாக நினைத்தேன். ஆனால் அப்படியான நிலைமை மும்பை அணியில் இப்போது இல்லை. இந்த மோசமான சூழலுக்கு நான் துளியும் பொறுப்பில்லை. இதற்கெல்லாம் அவர்களே (மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம்) காரணம். இந்த சீசன் தான் எனக்கு கடைசி” என தெரிவித்தார். 

மும்பை இந்தியன்ஸூக்கு பிளவு

ரோகித் சர்மாவின் இந்த உரையாடல் வெளியாவதற்கு முன்பே அவர் அதிருப்தியில் இருப்பது தெரிந்த நிலையில், அபிஷேக் நாயருடன் பேசிய வீடியோ அதனை உறுதிபடுத்தும் விதமாகவே இருந்தது. ரோகித் சர்மா மட்டுமல்லாமல் சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அணுகுமுறையால் கடும் அதிருப்தி அடைந்தனர். ஏனென்றால் அவர்கள் நீண்ட வருடங்களாக மும்பை அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சூழலில் அவர்களை கேப்டன் பொறுப்புக்கு பரிசீலிக்காமல் ஹர்திக் பாண்டியாவை அழைத்தது வந்ததை பும்ரா, சூர்யகுமார் விரும்பவில்லை. அதனால் ஒரு அணியாக மும்பை இந்தியன்ஸ் இந்த ஐபிஎல் தொடரில் ஆடவில்லை. 

ரோகித் சர்மா விலகல்

அதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் கடைசி இடமான 10வது இடத்துடன் மும்பை இந்தியன்ஸ் நிறைவு செய்திருக்கிறது. மேலும், லக்னோ அணிக்கு எதிரான மும்பை அணி விளையாடிய இந்த ஐபிஎல் தொடரின் கடைசி போட்டி, ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடும் கடைசி போட்டியாகவும் பார்க்கப்படுகிறது. அவர் அடுத்த ஆண்டு மும்பை அணிக்கு ஆடமாட்டார் என்பது ஏறக்குறைய உறுதியாக சொல்லப்படுகிறது. இதனை தெரிந்து கொண்ட மற்ற ஐபிஎல் அணிகள் அவரை தங்கள் அணிக்கு கொண்டு வர இப்போதே பேரத்தை தொடங்கிவிட்டன. இந்த வரிசையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன. இந்த அணிகளை தவிர்த்து மற்ற அணிகள் பெரிய டீல் ஓகே செய்யும்பட்சத்தில் அந்த அணிக்கு செல்லவும் ரோகித் சர்மா தயாராகவே இருக்கிறார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.