வி.கே.பாண்டியன் மீது பிரதமர் மோடி மறைமுக விமர்சனம் – பின்னணி என்ன?

புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏராளமான கனிம வளங்கள் இருந்தபோதிலும், அம்மாநிலம் வறுமையில் இருப்பது வேதனை அளிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒடிசாவின் அங்குல் நகரில் பாஜக சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசியதாவது: ஒடிசாவில் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக பிற மாநிலங்களுக்குச் செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.

ஒடிசாவில் கனிம வளங்கள் ஏராளமாக இருந்த போதிலும் மக்கள் இடம்பெயர்ந்து செல்லும் நிலை உள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்தபோதும் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒடிசாவின் நிலையைப் பார்த்து நான் வேதனை அடைந்தேன்.

இந்த பரிதாப நிலைக்கு யார் பொறுப்பு ஊழல்வாதிகள் சிலரின் கட்டுப்பாட்டில் இங்குள்ள பிஜேடி அரசு உள்ளது. முதல்வர் அலுவலகமும் வீடும் ஊழல்வாதிகள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பிஜேடி யின் சிறு நிர்வாகிகளும் தற்போது கோடீஸ்வரர்களாக உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி காணாமல் போன விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசினார். “நமது வீட்டு சாவி காணாமல் போனால் ஜெகந்நாதரிடம் முறையிடலாம். ஆனால் ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியை 6 ஆண்டுகளாக காணவில்லை.

இந்த சாவி தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்” என்றார் பிரதமர். தமிழகத்தின் மதுரையை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் பிஜேடி கட்சியின் முக்கியத் தலைவராக உருவெடுத்துள்ள நிலையில் அவரது பெயரை குறிப்பிடாமல் பிரதமர் மறைமுகமாக சாடினார்.

யார் இந்த வி.கே.பாண்டியன்? – வி.கே.பாண்டியன் 2000 ஆண்டு குடிமைப்பணி தேர்வில் ஐஏஎஸ் பெற்று பஞ்சாப் கேடர் அதிகாரி ஆனார். 2002-ல் ஒடிசா மாநில ஐஏஎஸ் அதிகாரி சுஜாதாவை மணம் முடித்ததால், அம்மாநிலப் பணிக்கு மாறினார்.

ஒடிசா மக்களின் அன்பை பெற்ற பாண்டியன் கடந்த 2011-ல் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிப்பட்ட உதவியாளர் ஆனார். முதல்வருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த அவர், கடந்த ஆண்டு அக்டோபரில் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார்.

இவரது முயற்சியால் பாஜக, பிஜேடி கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. எனினும் கூட்டணி உருவாகவில்லை. இதையடுத்து பாஜகவினர், வி.கே.பாண்டியனை விமர்சிக்கத் தொடங்கினர். இந்த வகையில், தற்போது பிரதமர் மோடியும் வி.கே.பாண்டியனை விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.