கழுகுகளின் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன.. எதிர்க்கட்சிகளை சாடிய யோகி ஆதித்யநாத்

லக்னோ,

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வுகளில் ஒன்றாக விளங்கும் மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் நீராடி வருகின்றனர்.

144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ந்தேதி தொடங்கியது. 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.

1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்திருந்தது. இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கும்பமேளாவிற்கு வருகை தந்து, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.

இந்தசூழலில், ஒன்றரை மாதமாக விமரிசையாக நடந்து வந்த கும்பமேளா, மகா சிவராத்திரி தினமான நாளையுடன் (பிப்.26) நிறைவடைகிறது. நிறைவு நாளான நாளை, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அயோத்தி தாம் ரெயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரெயிலில் வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில் பன்றிகள் கண்களுக்கு அசுத்தமும், கழுகுகளின் கண்களுக்கு பிணங்களும் தெரிந்ததாக உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், “கும்பமேளாவில் தேடி வந்த எல்லோருக்கும் ஏதோ ஒன்று கிடைத்தது. கழுகுகள் கண்களுக்கு பிணங்கள் மட்டுமே தெரிந்தன, பன்றிகள் கண்களுக்கு அசுத்தம் தெரிந்தது, உணர்வுப்பூர்வமான மக்களுக்கு தங்கள் உறவுகளுடன் அழகான நினைவுகள் கிடைத்தன, நேர்மையானவர்களுக்கு நன்மை கிடைத்தது, பக்தர்கள் கடவுளை கண்டனர்.

மகா கும்பமேளாவின் மகத்துவத்தை அவமதிக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள், இது அவர்களின் நோக்கங்களை அம்பலப்படுத்துகிறது. அவர்களின் கருத்துக்கள் மகா கும்பமேளா மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியம் மற்றும் நம்பிக்கைக்கு அவமானம்

கடந்த ஒன்றரை மாதங்களாக, இடதுசாரிகளும் சோசலிஸ்டுகளும் இந்த நிகழ்வை பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பி, கற்பனையான அழுக்கு, ஒழுங்கின்மை மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்த எல்லாவற்றையும் செய்தனர், மேலும் அவர்களின் சித்தாந்த பிரச்சாரம் களத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

கங்கை மற்றும் யமுனை சங்கமத்தில் புனித நீராடுவதன் மூலம் 65 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் சனாதன தர்மத்தின் மீதான தங்கள் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர். நாட்டின் ஆன்மீக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ஒரு மைல்கல்லை அமைத்துள்ளது” என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கும்பமேளா கூட்ட நெரிசலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தநிலையில் உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.