அமலாக்கத் துறையின் கைது உரிமை குறித்து வரும் ஏப்ரலில் விசாரணை நடைபெறும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கை உரிமைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 241 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, ரவிகுமார் அமர்வு கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
“நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை கைது நடவடிக்கையை மேற்கொள்ளலாம், சொத்துகளை முடக்கலாம். இதற்கு அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இருக்கிறது” என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் 50, 63-வது பிரிவுகளை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “ஏப்ரல் இறுதி அல்லது மே முதல் வாரத்தில் வழக்கு விசாரணையை தொடங்கலாம்” என்று தெரிவித்தார்.
மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறும்போது, “வழக்கை 3 நீதிபதிகள் முன்பு பட்டியலிட வேண்டும். காலதாமதம் இன்றி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இறுதியில் நீதிபதிகள் கூறும்போது, “3 நீதிபதிகள் முன்பு வழக்கு பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் தவறுதலாக 2 நீதிபதிகள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கை 3 நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்கிறோம். வரும் ஏப்ரலில் வழக்கின் விசாரணை நடைபெறும்” என்று தெரிவித்தார்.