Kingston Review: கடலில் இறங்கினால் பேய் அடித்துவிடும்! எப்படியிருக்கிறது இந்த ஹாரர் கடல் சாகசம்?

தூத்துக்குடியிலுள்ள கடற்கரை கிராமமான தூவத்தூர் மக்களின் முதன்மை வாழ்வாதாரம் மீன்பிடித்தல். அது பல ஆண்டுகளாகக் கடல் சாபத்தாலும், கடலுக்குள் செல்லும் மீனவர்கள் திரும்பி வருவதில்லை என்ற பயத்தாலும் தடைப்பட்டிருக்கிறது. அந்த மக்களுக்குத் தூத்துக்குடி ஹார்பரின் கடத்தல் மன்னன் தாமஸ் (சபுமோன் அப்துசமத்), அவனிடம் அடியாளாக இருக்கும் தூவத்தூரைச் சேர்ந்த கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) மூலமாக வேலை கொடுக்கிறான். சொந்தமாக ஒரு படகை வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கிங்ஸ்டன், தாமஸுக்குக் கடல் அட்டைகளைக் கடத்தும் வேலையைத் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து செய்து வருகிறான்.

ஒருநாள் ரவுண்ட் பணியில் கடற்படை இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, கூட்டாளிகளில் அப்பாவியாக இருக்கும் ஒருவரை இழக்கிறான் கிங்ஸ்டன். அந்த மரணமும் அதன் மூலம் தெரியவரும் ஓர் உண்மையும் அவனை உலுக்கிவிட, கடல் குறித்த மர்மங்களைக் கண்டறிய தன் நண்பர்களுடன் படகில் கிளம்புகிறான். கடலின் மர்மம்தான் என்ன, அதற்கும் கிங்ஸ்டனுக்கும் என்ன தொடர்பு என்பதைச் சொல்கிறது படம்.

Kingston Review

நல்லவன் – கெட்டவன் என்று இனம் காணமுடியாத வேடத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க முயன்றிருக்கிறார். பணத்திற்காக எதையும் செய்யும் அவரது குணம் வார்த்தைகளால் வெளிப்படுகிறதே தவிர, திரைக்கதையிலும் அவரது பங்களிப்பிலும் வெளிப்படவில்லை. மேலும் முழுக்கதையும் தோள்களில் தாங்கும் அளவுக்கான பாத்திரம் என்பதால் சற்றே தடுமாறியிருக்கிறார். தூத்துக்குடி வட்டார வழக்கும் சற்றே உறுத்தல்! ரோஸாக நாயகி திவ்யா பாரதி, காதல் பாத்திரமாக மட்டுமே வந்து போகாமல் கதையோடே பயணித்து சற்றே வாசம் வீசுகிறார். 

தாமஸாக சபுமோன் அப்துசமத் வில்லத்தனம் ஓகே என்றாலும், அவரது பாத்திரத்திற்கான ஆழம் முழங்கால் அளவைக் கூட எட்டவில்லை. பின்கதைகளில் சாலமனாக வரும் சேத்தனும், ஸ்டீபனாக வரும் அழகம் பெருமாளும் தங்கள் பணிகளைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள். இருப்பினும் அவர்களின் பாத்திரப்படைப்பு சொற்களில் இருப்பது போன்று, காட்சிகளில் வலுவில்லாமல் இருப்பது பெரிய மைனஸ். கடலின் நடுவே நடக்கும் களேபர காட்சிகளில் இளங்கோ குமரவேல், ஆண்டனி, அருணாசலேஸ்வரன், ராஜேஷ் பாலச்சந்திரன் ஆகியோர் குறைசொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

Kingston Review

கடற்கரை சூழல், மர்மமான கடல் பின்னணி, மாறி மாறி வரும் காலக்கோடு ஆகியவற்றுக்கு ஏற்ப ஒளியுணர்வைத் தந்து ஒளிப்பதிவில் ஸ்கோர் செய்திருக்கிறார் கோகுல் பெனாய். குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் ஜாம்பி உருவங்களுக்கான திகில் காட்சிகளும், விஷுவல் எஃபெக்ட்ஸ் சேர்ந்த காட்சிக் கோணங்களும் காட்சிப் பிரமாண்டத்தைக் கொடுத்துப் படத்தின் முக்கிய பலமாகிறது.

இதைத் தொழில்நுட்ப ரீதியாக நேர்த்தியான கட்களால் சிதைக்காமல் கோத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் சான் லோகேஷ். இருப்பினும் கதை சொல்லும் பாணியில் எந்தக் காட்சியும் நினைவில் நிற்காத வேகத்தை அவர் எடுத்திருப்பது சிக்கல். இது நேர்கோட்டில் இல்லாத திரைக்கதையை மேலும் குழப்பமாக்கி ஆங்காங்கே நம்மைப் படத்தை விட்டு விலகச் செய்கிறது. வேலியிடப்பட்ட கடற்கரை, படகு என்று எஸ்.எஸ்.மூர்த்தியின் கலை இயக்கம் கவனிக்க வைக்கிறது.

கடற்கரை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டு, கடல் புனைவுத் திகிலை உருவாக்கும் அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷின் யோசனை புதுமையானது. இருப்பினும் முதல் பாதியின் கதை, கரையில் சாதாரணமாகவே நகர்கிறது. எக்கச்சக்க கதாபாத்திரங்கள், கடத்தல், பொன் புதையல், கடல் பேய்கள், பிளாஷ்பேக்குகள் என்று கடலுக்குள் செல்லாமலே நீச்சல் அடித்த உணர்வினைக் கொடுத்து, அயர்ச்சி வைத்தியம் தருகிறது திரைக்கதை. அதில் பேசப்பட்டிருக்கும் சமூக அரசியல் மட்டுமே ஆறுதல்!

நேர்கோட்டில் செல்லாத திரைக்கதை, உயர்ந்த லட்சியங்கள் கொண்ட எண்ணம் எல்லாம் சரியே… ஆனால் அதற்கு ஏற்ப எழுத்தில் வலு இல்லாததுதான் சிக்கலே! மேலும் தூத்துக்குடி வட்டார வழக்கோடு, சாதாரண பேச்சு வழக்கையும் சேர்த்து ஒருவாறாகக் கலந்தடித்துக் கொடுத்திருப்பது, நம் பொறுமையை வெகுவாகச் சோதிக்கும் முயற்சி.

Kingston Review

இரண்டாம் பாதி திரைக்கதை கடலுக்குள் செல்ல, ஜாம்பி போன்ற பேய்களும், திகில் காட்சிகளும் நம்மைப் படத்துக்குள் ‘வாங்க ஜி… வாங்க ஜி…’ என்று வரவேற்கின்றன. இருப்பினும் முதல் பாதியை இணைக்க முயலும் திரைக்கதை, மீண்டும் நம்மை நடுக்கடலில் தத்தளிக்க வைக்கிறது. கடலில் நீர்த்துளிகள் போலப் படத்தில் பிளாஷ்பேக்குகளின் எண்ணிக்கை கணக்கே இல்லாமல் நிறைந்திருக்கின்றன. எந்தப் பாத்திரங்களின் உணர்வும் ஆழமாகக் கடத்தப்படாததால், தொழில்நுட்பப் பிரமாண்டம் இருந்தும் மனதில் பதியும் காட்சிகள் இல்லாமல் போகின்றன.

பொன் புதையலையும், கடல் பேய்களையும் ஒரு புள்ளியில் இணைத்த விதம் சிறுவர்களுக்கான கதை போல இருந்தது ஏமாற்றமே! இவற்றையெல்லாம் தாண்டி, ஊர் மக்கள் மீன் பிடிக்கக் கூடாது என்றால், அதே கடலில் கிங்ஸ்டனின் கூட்டாளிகள் கடத்தல் தொழில் மட்டும் செய்வது எப்படி, அருகிலிருக்கும் ஊர்களுக்கும் இந்தக் கடல்தானே இருக்கிறது, அவர்களைப் பேய் அடிக்காதா என லாஜிக் கேள்விகளும் நிறையவே எட்டிப் பார்க்கின்றன.

Kingston Review
Kingston Review

மொத்தத்தில் தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பான அனுபவம், இரண்டாம் பாதியின் திகில் தருணங்கள் ஆகியவற்றைச் சிறப்பாகத் தந்தாலும், வலுவில்லாத குழப்பமான திரைக்கதை, ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றால் இந்த ‘கிங்ஸ்டன்’ புரியாத பயணத்தில் நம்மை மூழ்கடிக்கிறான்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.