''குற்றவாளிகள் மீது டெல்லி அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்'' – கட்டிட விபத்து குறித்து முதல்வர் ரேகா குப்தா கருத்து

புதுடெல்லி: டெல்லியில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள முதல்வர் ரேகா குப்தா, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “முஸ்தபாபாத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த துயர சம்பவத்தால் மனம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

DDMA, NDRF, DFS மற்றும் பிற நிறுவனங்கள் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. காயமடைந்த அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில் இறந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மாக்களுக்கு கடவுள் சாந்தியை அளிப்பாராக. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கும் வலிமையை, அவர்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு இறைவன் அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து டெல்லி சட்டமன்ற துணை சபாநாயகரும் முஸ்தபாபாத் எம்எல்ஏவுமான மோகன் சிங் பிஷ்ட் கூறுகையில், “மூன்று மாதங்களுக்கு முன்பு, நான் தேர்தலில் வெற்றி பெற்றபோது, ​​நான் இந்தப் பகுதியில் இருந்தேன். அந்தக் கட்டிடம் விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அப்போது நான் கூறியிருந்தேன்.

டெல்லி துணைத் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம், அதிகாரிகளின் அலட்சியத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளேன். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். முஸ்தபாபாத் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கட்டிடங்கள் நிறைந்துள்ளன. கட்டிடங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மிகச்சிறிய பரப்பளவு கொண்ட கட்டிடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிக்கிறார்கள். நிச்சயமாக, இது ஒரு பேரழிவிற்கு வழிவகுக்கும்” என தெரிவித்தார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் டிஐஜி மொஹ்சென் ஷாஹிடி கூறுகையில், “இடிந்து விழுந்த இந்த 4 மாடி கட்டிடத்தில் சிக்கியவர்கள், உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. இருப்பினும், காப்பாற்றக்கூடிய உயிர்கள் இருக்கும் என்றும், தீவிரமாகத் தேடும் பணிகள் நடைபெறும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

கட்டிட இடிபாடுகள் முழுமையாக அகற்றப்பட்டு வருகின்றன. இது மிகவும் நெரிசலான பகுதி என்பதால், இங்கு பணிபுரிவது மிகவும் சவாலானது. இட நெருக்கடி காரணமாக இடிபாடுகளை அகற்ற கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. தற்போது, ​​தீயணைப்பு சேவைகள், டெல்லி காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் உட்பட இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. அனைவரும் மீட்புப் பணியில் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.” என கூறினார்.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து டெல்லியில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நான்கு பேர் உயிரிழந்தது மிகவும் தீவிரமான பிரச்சினை, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்கு பாஜக தலைமையிலான டெல்லி அரசுதான் பொறுப்பு.” என குற்றம் சாட்டினார்.

அதிகாலையில் நிகழ்ந்த சோகம்: தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் இன்று (ஏப்.19) அதிகாலை நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். 10 சிகிச்சைக்காக ஜிடிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீசார், அவர்களை மீட்கும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.