Rohit Sharma : 'சின்ன வயசுல க்ரவுண்டுக்குள்ளேயே விட மாட்டாங்க; ஆனா, இப்போ' – ரோஹித் நெகிழ்ச்சி

‘மும்பை வெற்றி!’

வான்கடேவில் சென்னைக்கு எதிராக நடந்த போட்டியை மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அதிரடியாக ஆடி 76 ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். விருதை வாங்கிவிட்டு ரோஹித் நெகிழ்ச்சியாக சில விஷயங்களைப் பேசியிருந்தார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

‘ரோஹித் நெகிழ்ச்சி!’

ரோஹித் சர்மா பேசியதாவது, ”மஞ்சள் ஜெர்சி போட்டிருந்த ரசிகர்கள் கூட என்னுடைய இன்னிங்ஸை பாராட்டினார்கள் என்கிறீர்கள். அதுதான் வான்கடேவின் ஸ்பெஷல். நல்ல கிரிக்கெட் காண எப்போதுமே இந்த ரசிகர்கள் ஆவலாக இருப்பார்கள். ஒரு அணியாக நாங்கள் சரியான சமயத்தில் பார்முக்கு வந்திருக்கிறோம்.

நீண்ட காலம் கிரிக்கெட் ஆடிவிட்ட பிறகு, மிக எளிதாக நம் மீதே நமக்கு சந்தேகம் வரத் தொடங்கும். அதைத் தொடர்ந்து வித்தியாசமாக சில விஷயங்களை முயன்று பார்ப்போம். ஆனால், என்னைப் பொறுத்தவரைக்கும் அடிப்படையான விஷயங்களைச் சரியாக செய்து தெளிவான மனநிலையோடு இருக்க வேண்டும் என்றே யோசிப்பேன்.

சரியான பந்துகள் சிக்கும்போது சரியாக கைகளை விரித்து பெரிய ஷாட்களை ஆடுவது முக்கியம். இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறையை பற்றி நிறைய பேசிவிட்டோம். நான் நேராக பேட்டிங் ஆட மட்டுமே வந்தால் போதும் என நினைத்தாலும் நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன். என்னுடைய பெயரில் வான்கடே மைதானத்தில் ஒரு ஸ்டாண்ட் அமையவிருப்பது எனக்கு கிடைத்திருக்கும் பெரிய மரியாதை, பெரிய கௌரவம்.

Rohit Sharma
Rohit Sharma

நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். சிறுவயதில் ஒரு காலத்தில் எங்களை இந்த மைதானத்துக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள். ஆனால், நான் என்னுடைய கிரிக்கெட் மொத்தத்தையும் இங்கேதான் ஆடியிருக்கிறேன். இப்போது இங்கே என் பெயரில் ஒரு ஸ்டாண்ட் என்பது எனக்கான பெரிய கௌரவம். என்னுடைய பெயர் அங்கே பொறிக்கப்படும் போது எப்படி ரியாக்ட் செய்வேன் எனத் தெரியவில்லை.’ என ரோஹித் பேசியிருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.