சென்னை: மாநகராட்சி சார்பில் ரிப்பின் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கான உணவுக் கூடத்தை மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்துவைத்தார்.
சென்னை மாநகராட்சி பணியாளர்களின் நலனுக்காக மருந்தகம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவை ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பணியாளர்கள் உணவு உண்பதற்கான கூடம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் கலைஞர் மாளிகையின் கீழ்த்தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் 100 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உணவு உட்கொள்ளும் வகையில் தேவையான வண்ண நாற்காலிகள், மேசைகள் மற்றும் குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவுக் கூடம், காலை 11 முதல் மாலை 4 மணி வரை செயல்படும். விரைவில் இதனருகில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் மூலம் சிற்றுண்டி விற்பனைக் கூடம் ஒன்றும் அமையவுள்ளது.
பணியாளர் உணவுக் கூடத்தை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா நேற்று திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் (சுகாதாரம்) வி.ஜெய சந்திர பானு ரெட்டி, மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ந.ராமலிங்கம், தலைமைப் பொறியாளர் (பொது) கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திட்டப் பணிகள் தொடக்கம்: அடையார் மண்டலம் 169-வது வார்டு, வேளச்சேரி பிரதான சாலை, ஹால்டா பூங்காவில் ரூ.2.82 லட்சத்தில் வாசிப்பு மண்டலம், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் உள்ள குழந்தைகள் மையத்தின் மேல்பகுதியில் ரூ.37.50 லட்சத்தில் பெண்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், ஜோதியம்மாள் நகரில் ரூ.4.65 லட்சம் மதிப்பில் சலவைக் கூடம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றுக்கு துணை மேயர் மு.மகேஷ்குமார் நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.