அடை​யாறு புற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில் டாக்​டர் சாந்தா சிலை: முதல்​வர் ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்

சென்னை: சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை வளாகத்தில் முன்னாள் தலைவர் சாந்தா உருவச்சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலகப் புகழ்பெற்ற புற்றுநோயியல் மருத்துவர் சாந்தா கடந்த 1927-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி பிறந்தார். மயிலாப்பூர் – தேசிய பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, 1949-ம் ஆண்டு தனது மருத்துவப் பட்டப் படிப்பு மற்றும் 1955-ம் ஆண்டு மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் துறையில் உயர் பட்டப்படிப்பு (MD) ஆகியவற்றை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்து முடித்தார்.

ஆரம்பத்தில் பெண்களுக்கான மருத்துவத்தில் ஆர்வம் இருந்தபோதிலும், பிறகு புற்றுநோயியல் துறைக்கு மாறினார். பிறகு 1955- ம் ஆண்டு மருத்துவ அதிகாரியாக புற்றுநோய் நிறுவனத்தில் சேர்ந்த அவர், புகழ்பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மற்றும் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் தனது பணியைத் தொடங்கினார்.

ஏப்ரல் 13, 1955 அன்று முதல் குடிபெயர்ந்து, தனது வாழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்து மறைந்தார். டாக்டர் சாந்தா அவர்கள் மருத்துவமனையில் வாழ்ந்த அந்த இடம் தற்போது அருங்காட்சியகமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய் நிறுவனம் பொறுப்புகள் தவிர்த்து வி. சாந்தா அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும், அவர் உலக சுகாதார நிறுவனத்தில் (WHO) புற்றுநோய் ஆலோசனைக் குழுவில் இருந்தார். புற்றுநோய்க்கான மாநில ஆலோசனைக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தார்.

தேசிய மற்றும் உலகளாவிய விருதுகள்: டாக்டர் சாந்தா தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள் மற்றும் இந்தியாவின் மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து ஏராளமான விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார். மாநில அரசு 2013-ம் ஆண்டு அவ்வையார் விருதை வழங்கி கௌரவித்தது. மிகவும் மதிப்புமிக்க தேசிய விருதுகளில், அவருக்கு 1986 -ம் ஆண்டு பத்மஸ்ரீ, 2006- ம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் 2016 -ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதுகள் வழங்கப்பட்டன, இது அவரது வாழ்நாள் சேவை மற்றும் அர்ப்பணிப்புக்கு சான்றாக நிற்கிறது. கடந்த 2005 -ம் ஆண்டில், சாந்தாவுக்கு ஆசியாவின் மிக உயர்ந்த கௌரவங்களில் ஒன்றான பொது சேவைக்கான ரமோன் மகசேசே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று காலை சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவர் டாக்டர் சாந்தாவின் திருவுருவச் சிலை மற்றும் நினைவு அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்எல்ஏ., அசன் மவுலானா, துணை மேயர் மு. மகேஷ் குமார், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் என்.எல். ராஜா, இயக்குநர் டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன், இந்து என்.ராம், அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை செயல் துணைத் தலைவர் ஹேமந்த் ராஜ், துணைத் தலைவர் விஜய் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.