ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதுகுறித்து விரிவான முறையில் விவாதிக்க ஏப்ரல் 28-ல் ஜம்மு-காஷ்மீர் சிறப்பு கூட்டத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஷ் சின்ஹா அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஆளுநர் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம், 2019, பிரிவு 18(1)-ன் அதிகாரத்தை பயன்படுத்தி ஜம்மு-காஷ்மீர் சிறப்பு பேரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 28) காலை 10.30 மணிக்கு பேரவை கூடும். இவ்வாறு உத்தரவில் கூறப்பபட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “ சுற்றுலாப் பயணிகள் 26 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற பிறகான நிலவரம் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த சிறப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது” என்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்ட ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையிலான அமைச்சர்கள் குழு கடந்த புன்கிழமை துணை நிலை ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.